Monday, December 25, 2023

ஆழிப்பேரலை அவலம்




கடலம்மா! கடலம்மா! 
எங்கள் கடலம்மா! 

அலை வந்து சீராட்ட
ஏலேலொ பாடி 
உன் கரையில் 
தானே வளர்ந்தோம்!

உன்னுள் முத்தெடுத்து
பசிக்கு மீனெடுத்து
உன் கரையில் நிலவு பார்த்து
கை வீசி நடந்ததெல்லாம்
நீ எங்கள் தாய் என்ற
உறவில் தானே கடலம்மா!

தாயாக நாம் நினைக்க
பேயாகி எம்மை ஏன் அழித்தாய்!

எங்கள் வாசல் வந்தேகிய
உப்புக்கற்றில் 
நேற்றுவரை
கறையேதும் 
இருந்ததில்லை.

கால் நனைத்த
நுரைகளில்,
உன் மடி பொறுக்கிய
கிளிஞ்சல்களில்
இரத்தவாடை
முகர்ந்ததில்லை

ஏன் அன்று
பேயாக மாறிப் போனாய்
எங்கள் கடலம்மா?

அன்று நீ
சங்க தமிழ் விழுங்கினாய்!
இன்று நீ
ஈழத்தமிழ் விழுங்கி
பசியாறிக் கொண்டாயோ!

காவல் தாயாய்
தேசத்தின் அரணாய்
நேற்றுவரை இருந்த நீ
இன்று ஏன் 
கொலை வாளை 
கையேந்தினாய்!

பூ என்றும்
பிஞ்சென்றும்
மூப்பென்றும் பாராது
அள்ளித்தின்றுவிட்டு 
இயல்பாய்
இருக்க
எப்படித்தான் 
முடிந்நது உனக்கு!!

காலங்கள் கடந்தாலும்
நினைவில்
நின்று அழியா
பெரும் கவலை!

மீண்டெழுவேம்!

மீண்டெழுதல் எமெக்கென்றும் 
புதிதல்ல
ஒன்றாய் அரும்பி
பலவாய் விரிந்து 
இவ்வுலகம்
எல்லாமுமாய் 
நிற்போம்!

ஈழ தமிழனுக்கு
சாவொன்றும்
புதிதல்ல
இதையும் 
கடந்து போவேம்!!!

அழித்தாலும்
மறைத்த்தாலும்
காலங்கள் கடந்து
எங்கள் 
வரலாற்றின்
சாட்சியாய்
நீயே இருப்பாய்
எங்கள் கடலம்மா!


Tuesday, May 9, 2023

இதுவொன்றும் கனவல்ல!


இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத் தமிழ் இனத்தின்
ஆயிரம் காலத்து வலி!

கள்ளிச் செடியும் 
முளைகொள்ள
மறுக்கும் 
கந்தக பூமியில் 
கொத்து கொத்தாய் 
எம்மை கொன்றழித்தவனை 
எப்படி மறப்போம்! 
 
பாதுகாப்பு வலயம் எனும்
கொலை வளையமிட்டு
கூண்டோடு எமை அழித்த
சமாதனத்திற்க்கான 
யுத்தம் என்ற   உன்
நயவஞ்சக த்தைத் தான் மறப்போமோ!

எங்கள் குருவிக்கூட்டை 
கலைத்து,  
குஞ்சுகளை தீயில் இட்டு 
பொசுக்கிய 
உன் கைகளை 
எப்படித்தான்
பற்றுவோம்!

இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத் தமிழ் இனத்தின்
ஆயிரம் காலத்து வலி!
 
இரத்தமும் சதையுமாய்  
முள்ளிவாய்க்காலில் 
காற்றோடு கரைந்த 
எங்கள் காவல் தெய்வங்களை 
மறந்திடத்தான் இயலுமோ!

பூ என்றும், 
பிஞ்சென்றும் 
மூப்பென்றும் பாராமல் 
எங்கள் இனத்தை 
வேரறுத்த  வஞ்சகரை 
எப்படி நாம் மறப்போம்!

வந்தாரை வாழ வைத்த 
இனமொன்றை 
நந்திக்கடல் வெளியில்  
கஞ்சிக்காய் அலையவிட்ட 
உன் கொடுமையைத்தான்
மறப்போமோ!?

நாயும் தீண்டா பிண்டமென  
வீதியெங்கும்  பிணமாகி  
நம் சொந்தங்கள் 
கிடந்ததைத்தான் 
மறப்போமோ?

இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத் தமிழ் இனத்தின் 
ஆயிரம் காலத்து வலி!  
நரம்பினில் ஏற்றி 
உருக்கொள்வோம்!

வீழ்ந்த எங்கள் 
உறவுகளை  
நினைவில்  கொள்வோம்!    
நீதி ஒருபோதும் 
பொய்த்தில்லை. 
வஞ்சகர் ஒரு நாளும்
வாழ்ந்ததில்லை!

மறுக்கப்பட்ட நீதிக்காய் 
நம்பிக்கையோடு 
போராடுவோம். 
காலங்கள் ஓடும்
காட்சிகள் மாறும்.
எங்கள் வானத்திலும்
வெள்ளிகள் முளைக்கும்!

இயற்கை எனது நண்பன்,  
வரலாறு எனது வழிகாட்டி 
எனச் சொன்ன 
எங்கள் தலைவனின்   
ஓர்மத்தை நெஞ்சினில் தாங்கி  , 
வலிகளை  நரம்பினில் ஏற்றி , 
அறம் வெல்லும் எனும் நம்பிகையை  
நினைவினில் கொண்டு 
விடியல் தெரியும்வரை 
தொடர்வோம் பயணம்!

இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத்தமிழினத்தின் 
ஆயிரம் காலத்து வலி!