Friday, July 5, 2024

கரும்புலி மாமா மாமி



பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி

சிறகடிக்கும் பட்டாம் பூச்சி 

வண்ண வண்ண பட்டாம் பூச்சி

எங்கள்  ஊரை காத்து நின்ற 

எங்கள் மாமா! எங்கள் மாமி!

கதைகள்  சொல்வேன்

கேளு நீயும்  பட்டாம்பூச்சி!



சின்ன சின்ன பூக்கள் 

நாங்கள்!

ஈழமண்ணின் விதைகள் நாங்கள்!

அடிமை எண்ணம்

எம்மில் இல்லை

மில்லர் மாமா

பெயரைச் சொன்னால்

கனவில் கூட எதிரி

அழுவான்!

ஈழநாடு பெருமை

கொள்ளும்!


எங்கள் பள்ளி

எங்கள் வீடு

எங்கள் கோயில் 

இடித்த அரக்கனை 

ஓட ஓட விரட்டிய

போர்க் எனும்

எங்கள் மாமா

தோளில் இருந்து

கதைகள் கேட்போம்

நீயும் வாயேன்

பட்டாம்பூச்சி!


பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி 

ஒன்றல்ல இரண்டல்ல

ஓராயிரம் கதையிருக்கு!

கவனமாக கேளு நீயும்!


யாருக்கும்  தெரியாமல்

வெற்றிக்கு உரமான

எங்கள் வீரர் கதைகள் 

சொல்வேன்

கேளு நீயும்

 பட்டாம்பூச்சி;


அடிமை வாழ்வு

என்றும் இல்லை 

ஈழத்தமிழன்

வீழ்வதில்லை

என்று சொல்லி

ஆழக்கடலில்

வெடியாய் வெடித்த

அங்கயற்கண்ணி 

எங்கள் வீட்டின்

மூத்த மாமி!


இன்ப துன்பம்

பார்பதில்லை

சொத்து சுகங்கள் 

சேர்பதில்லை

வாழும் போதும்

சாகும் போதும்

எம்மக்காய்

வாழ்ந்த வீரர்களை

உலகில் எங்கும் 

கண்டதுன்டோ

பட்டாம்பூச்சி!!


பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி 

ஒன்றல்ல இரண்டல்ல

ஓராயிரம் கதையிருக்கு!

கவனமாக கேளு நீயும்!


ஈழத்தமிழன் 

பிள்ளை நான்

உலகம் காணா

ஈகங்களை

கண்டுவளர்ந்த

மழழை நான்


எமக்காய் வாழ்ந்த

வீரர்களை நினைவில்

என்றும் வைத்திடுவோம்

கரும்புலிகள்

நினைவுநாளிள்

அவர் ஈகம் 

நினைத்திடுவோம்!












கரும்புலிகள்

 


கரும்புலிகள் 

அவர் பெயர்

உச்சரிக்கும் போதே!

உள்ளம் கால் தொடங்கி

உச்சி வரை விர் என்று

பரவும் உணர்வு பிரவாகம்!


எந்த தூரிகைக்குள்ளும்

அடக்கமுடியா ஓவியங்கள்!

கற்பனை கடந்த 

சோதிகள்!

அடிமுடி தெரியா

அற்புதங்கள்!


பலவீனமான இனமொன்றின் 

பலமாய் இருந்தவர்!

தாவிவந்த பகை 

அழித்து

கந்தக நெடியாய் காற்றில்

கலந்தவர்!


புறந்தமிழ் சொன்ன 

மறத்தமிழ் வீரர்!

புகழதை விஞ்சிய

எங்களின் வீரர்!


இறந்தவர்களுக்காய்

அழுதவர் மத்தியில்

அழுதவர்களுக்காய்

வெடிசுமந்தார்!


இனி இங்கே மலரும்

சின்னப்பூக்கள்

வாடாதென 

சிரித்தபடி கையசைத்து

சென்றார்!


வாழும் போதும்

சாகும் போதும்

மற்றவருக்காய்

வாழ்ந்த தெய்வ பிறவிகள்!


குனிந்த தலைகளை

நிமிர்ந்திட வைத்தவர்!

எல்லைச்சாமியாய்

எங்களை காத்தவர்!

சந்ததி வாழ்ந்திட

தம்மையே தந்தவர்!


காலம்  உள்ளவும்

பெருவெளியில் காற்றாய்

முற்றத்து மல்லிகையாய்

கரை தழுவும் கடலலையாய்,

உதிரத்தோடு கலந்த  உள்ளுணர்வாய்,  

என்றும்

எங்களுடன் வாழ்வீர்!