Tuesday, May 9, 2023

இதுவொன்றும் கனவல்ல!


இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத் தமிழ் இனத்தின்
ஆயிரம் காலத்து வலி!

கள்ளிச் செடியும் 
முளைகொள்ள
மறுக்கும் 
கந்தக பூமியில் 
கொத்து கொத்தாய் 
எம்மை கொன்றழித்தவனை 
எப்படி மறப்போம்! 
 
பாதுகாப்பு வலயம் எனும்
கொலை வளையமிட்டு
கூண்டோடு எமை அழித்த
சமாதனத்திற்க்கான 
யுத்தம் என்ற   உன்
நயவஞ்சக த்தைத் தான் மறப்போமோ!

எங்கள் குருவிக்கூட்டை 
கலைத்து,  
குஞ்சுகளை தீயில் இட்டு 
பொசுக்கிய 
உன் கைகளை 
எப்படித்தான்
பற்றுவோம்!

இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத் தமிழ் இனத்தின்
ஆயிரம் காலத்து வலி!
 
இரத்தமும் சதையுமாய்  
முள்ளிவாய்க்காலில் 
காற்றோடு கரைந்த 
எங்கள் காவல் தெய்வங்களை 
மறந்திடத்தான் இயலுமோ!

பூ என்றும், 
பிஞ்சென்றும் 
மூப்பென்றும் பாராமல் 
எங்கள் இனத்தை 
வேரறுத்த  வஞ்சகரை 
எப்படி நாம் மறப்போம்!

வந்தாரை வாழ வைத்த 
இனமொன்றை 
நந்திக்கடல் வெளியில்  
கஞ்சிக்காய் அலையவிட்ட 
உன் கொடுமையைத்தான்
மறப்போமோ!?

நாயும் தீண்டா பிண்டமென  
வீதியெங்கும்  பிணமாகி  
நம் சொந்தங்கள் 
கிடந்ததைத்தான் 
மறப்போமோ?

இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத் தமிழ் இனத்தின் 
ஆயிரம் காலத்து வலி!  
நரம்பினில் ஏற்றி 
உருக்கொள்வோம்!

வீழ்ந்த எங்கள் 
உறவுகளை  
நினைவில்  கொள்வோம்!    
நீதி ஒருபோதும் 
பொய்த்தில்லை. 
வஞ்சகர் ஒரு நாளும்
வாழ்ந்ததில்லை!

மறுக்கப்பட்ட நீதிக்காய் 
நம்பிக்கையோடு 
போராடுவோம். 
காலங்கள் ஓடும்
காட்சிகள் மாறும்.
எங்கள் வானத்திலும்
வெள்ளிகள் முளைக்கும்!

இயற்கை எனது நண்பன்,  
வரலாறு எனது வழிகாட்டி 
எனச் சொன்ன 
எங்கள் தலைவனின்   
ஓர்மத்தை நெஞ்சினில் தாங்கி  , 
வலிகளை  நரம்பினில் ஏற்றி , 
அறம் வெல்லும் எனும் நம்பிகையை  
நினைவினில் கொண்டு 
விடியல் தெரியும்வரை 
தொடர்வோம் பயணம்!

இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத்தமிழினத்தின் 
ஆயிரம் காலத்து வலி! 



Thursday, April 2, 2020

நீண்ட காத்திருப்பு அத்தியாயம்- 01




"சாகரவர்த்தனா"  போர்க்கப்பல்  கொமடோர்  அஜித் போயகொட. 19.09.1994 அன்று  மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் பிடிக்கப்பட்டு எட்டு வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டார்.

போயகொட சொல்ல சுனிலா கலபதி எழுதிய A Long Watch என்ற  வரலாற்றுக்குறிப்பு 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூல் தமிழில் தேவாவின் மொழிபெயர்ப்பில் 'வடலி' பதிப்பகத்தின் ஊடாக "நீண்ட காத்திருப்பு" என்ற பெயரில் தற்போது 2020ம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.

எதிரியின் போரியல் தலைவனாக இருந்து பின்னாலில் சிறைப்பட்டு இருந்த சிங்கள போர்ப்படை அதிகாரியாக தனது பார்வையை முன்வைக்கிறார்...

இப்புத்தகம் எதிரியாளர் ஒருவர் தமிழர் போராட்டத்தின் பார்வையாளராக எழுதும் போராட்ட ஆவணம். இப்புத்தகம் எல்லோருக்கும் கிடைக்க வழி இருக்காது என்பதால் தேவாவின் குரலில் ஒலிப்புத்தகமாக வெளியிடுகின்றோம்.

இக் கடற்சமரின் வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள். “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி  மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி  கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களை நினைவில் கொள்வோம்.

அத்தியாயங்கள் 1 முதல் 40 வரையான ஒலிப்புத்தகங்கள்

Monday, March 9, 2020

சினம் கொள்


எழில் கொஞ்சும் எங்கள் தாயகத்தை காட்சிப்படுத்திய அழகுக்காக அந்த ஒளிப்பதிவாளர்களின் திறமைக்கு முதலில் ஒரு சலூட். .... வண்ண மயமாய் நெஞ்சை இதமாய் வருடுகிறது அந்த காட்சிகள். கிளிநொச்சியில் தொடங்கி முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் யாழ்ப்பாணம் ,செம்மண் தரவைகள்  , தோட்டவெளிகள் ,கெளதாரி முனை என தாயகத்தின் அழகை ஒளிப்படக்கருவிக்குள் கையகப்படுத்திய அந்த வித்தை மிக அருமை..



எழில் கொஞ்சும் எங்கள் தேசத்தை இதற்க்கு முன் யாரும் இப்படி அழகாய் எந்த போலியும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள்.... கொள்ளை அழகு ... 

இதற்க்காகதானே இவ்வளவு விலை கொடுப்பும்... 

அகலத்திரையில் அது விரியும் போது மனதில் பொங்கும் மகிழ்வு.... வார்த்தைகளில் சொல்ல முடியா உணர்வு அது

விடுதலைத்தீ முளாசி எரிந்த தேசம் ஒன்றின் வடுக்களை தாங்கி நிற்க்கும் இனம் ஒன்றின் வாழ்வையும் அதன் உணர்வுகளையும் சொல்லும் திரைக்காவியம் இது.



சிறையில் இருந்து விடுதலையாகி வரும் முன்னாள் புலனாய்வு பிரிவு போராளி அமுதன் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வந்திறங்கும் காட்சியோடு ஆரம்பிக்கும் திரைக்கதை  பல கிளைகளாய் விரிகிறது ..

முன்னால் போராளி குடும்பங்கள்  வறுமையுடன் போடும் போராட்டங்கள், திடீர் காரணம் இன்றிய போராளிகளின் மரணங்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் , புலம் பெயர் முன்னாள் செயற்ப்பாட்டாளர்களின் பொறுப்பற்ற செயல்கள் , அரச அடக்குமுறைக்கெதிரான இன்றும் தொடரும் மக்கள் போராட்டம், சீரழிந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை என பல கதைகளை தொட்டு நீள்கின்றது இந்த சினம்கொள் திரைக்காவியம்..

எத்தனை இடர்களை சந்தித்தாலும் துவண்டு விடாது நிற்க்கும் விடுதலைப் போராளிகளின் மனத்திடத்தை, தாம் நேசித்த மக்களுக்காக உருகும் போராளியாய் அமுதன், புற்று நோயால் சாகும் போதும் தன் பிள்ளைகளுக்கு உறுதிகூறும் போராளித்தாயாய் யாழினி , ஒரு கையையும் இரு காலையும் இறுதியில் மனைவியையும் இழந்து நிற்க்கும் தமிழரசன் என ஒவ்வொரு காதாப்பாத்திரமும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள் இல்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்று  தான் கூற வேண்டும். 

அப்படியொரு தத்துரூப நடிப்பு.

வெளி நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருக்கும் முன்னாள் விடுதலைப் போராட்ட செயற்ப்பாட்டாளரிடம் புற்று நோயால் வாடும் முன்னாள் போராளிக்கு பண உதவி கேட்க அவர் பதிலுக்குபொறுப்பு தந்தவர் வந்து கேட்க்கட்டும் திருப்பித்தாறன்எனும் அவரின் பதில் பலருக்கு சாட்டையடி....

"அண்ணையின்ட பிள்ளைகள் நாங்கள் எங்களைப்போய் ,எப்பிடி தவறாய் நினைஞ்சீங்கள்...

என்று அமுதன் தன்னை நியாயப்படுத்தும் போது ஈழத்தமிழனாய் நிமிர்கின்றோம்!.... நேர்மை என்ற அந்த ஒற்றைச்சொல்லை இதைவிட யாரும் தெளிவாய் புரிய வைக்க முடியாது.. தீபச்செல்வனின் வரிகள் அபாரம்.


எம் விடுதலைப் போராட்டத்தையோ, எம் மக்களின் கதையையோ தமிழகத் தமிழர்களால் எக்காலத்திலும் உருவாக்க முடியாது. தமிழகத்தில் இருக்கக்கூடிய படைப்பாளிக்கு அது ஒரு கதை. ஈழத்திலிருந்து வரக்கூடிய இயக்குநருக்கு அது ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கள் சினிமாவை எங்களால்தானே உருவாக்க முடியும்.”  எனக்கூறும் இயக்குனர் ரஞ்சித்தின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை

அவர் சொன்னது போலவே ரத்தமும் சதையுமான அந்த உணர்வை கச்சிதமாய் திரையில் காட்டி இருக்கிறார்

அன்மைக்காலமாக வெளிவரும் ஈழத்து சினிமாக்கள் தென்னிந்திய சினிமாக்களின் பிரதிபலிபுக்களாகவே இருக்கின்றன. இது மிகப்பெரும் அவலம்...    இந்த போக்குகளில் இருந்து வழுவி  ஈழத்து சினிமாவை கலப்படம் இன்றி தனித்துவமான ஈழத்துக்கான  சினிமாவாக உயிர்பிக்க செய்ததில் சினம் கொள் திரைக்குழு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எனலாம்.

படம் பார்க்கபோன சிறிய பின்னனிக்கதையுடன் இத்திரைப்படத்தின் வெற்றியை பதிவிடலாம் என நினைக்கிறேன்...

ஞாயிற்றுக்கிழமை ,மெல்பேர்னில்  உள்ள  புறநகர் ஒன்றில் மாலைக் கட்சிக்கு குடும்பமாய் சென்றோம். படம் பார்க்க செல்ல முன்னமே  எனது சின்னவன் சேரன்(7வயது)  அடம்பிடிக்கத்தொடங்கினான்... எனக்கு தமிழ்ப்படம் வேண்டாம். நான் சிறுவர்களுக்கான அன்மையில் வெளியான எதோ ஒரு ஆங்கிலப்படம் தான் பார்பேன் என ஒற்றைக்காலில் நின்றான்.. 

கடைசியாய் தியேட்டரில்  பார்த்த பிகில் தந்த பிகிலாக இருக்கலாம்...

ஒருவாறு சமாளித்து  கூட்டிப்போய் போப்கோன் வாங்கிக் கொடுத்து அவனை சமாதானப்படுத்தி  இருக்கையில் ஒருவாறு  இருந்தால்...


படம் தொடங்க அவனும் தொடங்கினான்!!   ஒவ்வொரு காட்சியிலும் சந்தேகம் கேட்க்க  தொடங்கினான்!!


ஆமிக்காரர் ஏன் சிங்களத்தில கதைக்கினம்?... 

உடைந்திருக்கும் நீர்த்தாங்கி  காட்டி அது என்ன?  அது ஏன் உடைஞ்சிருக்கு....

வற்றாப்பளை அம்மன் கோயில் காட்சியில வந்தவருக்கு , பிறகு என்ன நடந்தது...

அவருடைய குடும்பம் எங்கே?

அமுதனின் சொந்த வீட்டுக்கு என்ன நடந்தது.

தமிழரசனுக்கு ஏன் கையில்லை.... 

யாழினி அக்கா ஏன் இறந்தார்?

மகிழினிக்கு என்ன நோய்?

ஏன் அமுதன் சிறைக்கு போனவர்?

கேள்வி கேட்டு  துளைத்து எடுத்தாங்கள் இருவரும்....  

தீபச்செல்வனை இலகுவாகவே எனது மூத்த மகன் சேயோன் (11 வயது) கண்டு பிடித்தான்... அந்த ஸ்டோர் கீப்பறா  வாறவர் தமிழ் Book Author அல்லவா என வியக்க வைத்தான்....

வீட்டில் உள்ள தமிழ்ப்புத்தகங்களில்  தீபச்செல்வனின்  முகத்தை கண்டதாக சொன்னான்...

அவர்தான் திரைக்கதை பாடல் வரிகள் எழுதியவர் எனும் போது வியந்தான்...

படம் பார்த்து ஒரு கிழமை கடந்தும் சிறுவர்கள் இருவரினதும் கேள்விகளும் , எங்கள் கலந்துரையாடலும் இன்னும் தொடர்கின்றது....

இவ்வளவு கேள்விகளுக்கும் பதில் சொல்லும் போது தான் கவனிதேன் முழுத் ஈழத்தமிழர் வரலாறும் தான் இதற்க்கான பதில்கள்.

ஆயிரம் கதைகளால் கூட செய்ய முடியாததை ஒரு காட்சி ஊடகம்  மிக இலகுவாக புரிய வைக்கும் என்பதை அனுபவபூர்வமாய் உணர்ந்தேன்.

இது தான் சினம் கொள் திரைப்படத்தின் வெற்றி என்பேன்.  


சேரனிடம் படத்துக்கு என்ன ரேட்டிங் கொடுக்கலாம் எனக் கேட்டேன்...   

பத்துக்கு ஒன்பது என்றான்.... 


ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய  கொண்டாட வேண்டிய  திரைக்காவியம் - சினம் கொள்.