Monday, February 18, 2008

ஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்

கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.
சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.

"சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.



அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.

கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.









தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

Saturday, January 5, 2008

உலக வரைபடத்தில் சில புதிய நாடுகள்

1990 ம் ஆண்டில் இருந்து இன்று வரை உலக பந்தில் 33 புதிய நாடுகள் உருவாகியுள்ளன.

1991 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் உடைவுடன் 15 நாடுகள் புதிதாய் உலகில் பிறப்பெடுத்தன.
1.ஆர்மெனியா (Armenia )
2.அசெர்பைஜான் (Azerbaijan )
3.பயிலொரஷ் (Belarus )
4.எஸ்ரொனியா (Estonia )
5.ஜோர்ஜியா (Georgia )
6.கசகஸ்தான் (Kazakhstan)
7.கிர்கிஸ்தான் (Kyrgyzstan )
8.லற்வியா (Latvia )
9.லிதுவேனியா(Lithuania )
10.மோல்டொவா (Moldova )
11.ரஷ்யா (Russia )
12.ரஜிகிஸ்தான் (Tajikistan)
13.ரேர்க்மெனிஸ்தான் (Turkmenistan )
14.உக்ரேய்ன் (Ukraine )
15.உஸ்பெக்ஸ்தான் (Uzbekistan )



1990 களின் ஆரம்பத்தில் யுகோசலாவாக்கியாவின் வீழ்ச்சியுடன் 5 புதிய நாடுகள் உதயமாகின.
1. பொஸ்னியா (Bosnia- 29/02/1992 இல்)
2.குரோசியா (Croatia-25/06/1991 இல்)
3.மசடோனியா (Macedonia- 08/09/1991 இல் அது தன்னை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த்த போதும் 1994 ம் ஆண்டே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கிகாரம் பெற முடிந்தது.)
4.மொன்டினிக்குரோ (Montenegro -03/06/2006)
5.சேர்பியா (Serbia- 17/04/1992)
6.சலோவேனியா (Slovenia- 25/06/1991 இல்)

21/03/1990 நம்பியா(Namibia) , தென் ஆபிரிக்காவிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது.

23/05/1990 இல் வடக்கு யெர்மனும் தெற்க்கு யேர்மனும் இனைந்து யெர்மன்(Yemen) எனும் புதிய நாடு உருவாகியது.

03/10/1990 இல் கிழக்கு ஜெர்மனியும் ,மேற்க்கு ஜெர்மனியும் இனைந்து ஜெர்மனி(Germany) எனும் நாடு உலக பந்தில் மீண்டும் உருவானது.

17/09/1991 மார்ஷல் தீவுகள்(Marshall Islands) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

17/09/1991 மைக்கிரோனேசியா(Micronesia) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

01/01/1993 ம் ஆண்டு செக்கொசெலாவாக்கியா செக்(Czech) குடியரசாகவும் , செலோவாக்கியாவாகவும்(Slovakia) இரண்டாய் பிரிந்தன.

25/05/1993 எரித்திரியா(Eritrea) வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் எதியோப்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.



1/10/1994 போலலு(Palau) அமெரிக்காவின் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

20/05/2002 கிழக்கு தீமோர் (East Timor) 1975 ம் ஆண்டு போர்த்துகல் இடம் இருந்து சுதந்திர நாடாகிய போதும் ,தனது இறைமையை இந்தோனேசியாவிடம் இழந்தது. மீண்டும் 2002 இல் தனது வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் இந்தோனேசியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

சோமாலிலாந்து (Somaliland) 18/05/1991 இல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்ததுடன் இன்றுவரை அமெரிக்காவாலும் சில ஐரோப்பிய , ஆபிரிக்க நாடுகளாலும் அங்கிகரிக்க பட்ட ஓர் நாடாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.



தமிழீழம் (Tamil Eelam)- 14/5/1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படி சிறிலங்கா குடியரசில் இருந்து பிரிந்து சென்று தமிழீழம் என்னும் தனி நாடொன்றை அமைப்பதற்காய் இன்று வரை போராடிவரும் நாடு.

Sunday, December 16, 2007

தமிழரின் இறைமையை ஆயுதத்தால் பறித்தெடுத்து சிங்களத்தோடு இணைத்த பிரித்தானியர் இப்போது "அகிம்சை" பேசுவது எப்படி நியாயம்?

தமிழரின் இறைமையை ஆயுதத்தால் பறித்தெடுத்து சிங்களத்தோடு இணைத்த பிரித்தானியர் இப்போது "அகிம்சை" பேசுவது எப்படி நியாயம்? என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளேடு சாடியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளேட்டில் (13.12.07) வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்:

கொழும்பில் தனது பணியை முடித்து, அமெரிக்காவின் வாஷிங்ரனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பிரதித் தூதுவர் மட்டப் பதவியை ஜனவரியில் ஏற்றுக்கொள்வதற்காக அங்கு புறப்பட முன்னர், கடந்த திங்களன்று சர்வதேச மனித உரிமைகள் நாளில் இங்கு தலைநகரில் நடைபெற்ற முக்கிய ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார் கொழும்புக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமினிக் சில்க்கொட்.

அவரது உரையில் முக்கிய கருத்து ஒன்றே பலராலும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது.

"ஈழம் என்ற தனிநாட்டுக்கான அரசியல் அபிலாசை சட்டமுறையற்றது என நான் கூறவில்லை. ஆனால் அதற்காகப் பயன்படுத்தப்படும் முறைதான் முக்கியமானது. புலிகள் அதற்காக மேற்கொள்ளும் முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல." என்று தத்துவம் போதித்திருக்கின்றார் விடைபெற்றுச் செல்லும் பிரிட்டிஷ் தூதுவர்.

இந்த உபதேசத்தை வேறு யாராவது இராஜதந்திரி கூறியிருந்தால் அது வேறு விடயம். இதை பிரிட்டிஷ் தூதுவரே இங்கு வந்து பெரும் அளப்பாக எடுத்துரைப்பதைத்தான் பொறுக்க முடியவில்லை, சகிக்க இயலவில்லை.

தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை சட்டமுறையற்றது என நாம் கூறவில்லை என்ற அளவுக்கு பிரிட்டன் தன்னைத் திருத்திக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அந்த இலக்கை எட்டுவதற்குத் தமிழர் தரப்பு நடத்தும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, விமர்சிக்கும் தகுதியும், அருகதையும் பிரிட்டனுக்கோ, அதன் இராஜதந்திரிகளுக்கோ அடிப்படையில் இல்லை என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

இலங்கைத் தீவில், தமிழர் தேசத்துக்கான இந்த விடுதலைப் போராட்டத்தினால் இவ்வளவு இரத்த ஆறு ஓடி, இவ்வாறு பெருமளவில் உயிர், உடைமைகள் அழிந்து, முழுத் தீவுமே கொடூர யுத்தத்தில் சிக்கி அல்லலுறுகின்றது என்றால் அந்த முரண்பாட்டுக்கு வித்திட்டு வழி சமைத்ததே பிரிட்டிஷ் காலனித்துவம்தான் என்பதை மறந்து மறைத்து பேசுகின்றாரோ பிரிட்டிஷ் தூதுவர்?

தேசங்களின் மீதும் தேசியங்களின் மீதும் ஆக்கிரமிப்பு மூலமான தனது சுரண்டல் புத்தியை சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரக் காலனித்துவம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இங்கு காட்டிய சமயம் இலங்கைத் தீவு எப்படி இருந்தது?

வெவ்வேறான மொழி, கலாசாரம், வாழ்வியல் முறை, வரையறை செய்து பிரிக்கப்பட்ட தெளிவான தொடர்ச்சியான தனித்தனியான தாயகப் பிரதேசங்கள் என்ற அடிப்படைகளோடு தமிழர் தேசமும், சிங்களவர் தேசமும் நீண்ட நெடுங்காலமாக இலங்கைத் தீவில் தனித்தனியாகவே அரசோச்சி வந்தன.

இந்தத் தீவை ஆக்கிரமித்த போர்த்துக்கீசரும் சரி, ஒல்லாந்தரும் சரி இந்த இரண்டு தேசங்களினதும் இறைமைகளையும், தனித்துவங்களையும் மதித்து, வேறுபடுத்தி, தனித்தனியாகவே அவற்றை ஆட்சி செய்தனர்.

ஆனால் பின்னர் அவர்களிடமிருந்து இலங்கைத் தீவை ஆயுத பலத்தால் பிடுங்கிக்கொண்ட பிரிட்டன், தன்னுடைய நிர்வாக வசதிக்காக தமிழர் தேசத்தையும், சிங்களவர் தேசத்தையும் 1833 இல் ஒன்றுபடுத்தி ஒன்றுபட்ட ஆளுகைக்குள் அவற்றைக் கொண்டுவந்த போதுதான் தமிழர் தேசத்தின் இறைமை, சிங்கள தேசத்தின் இறைமையுடன் கலந்து அதன் கீழ் மடங்கிப்போகும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

அதன்பின்னர் சர்வதேச உலகில் ஏற்பட்ட பல்வேறு அழுத்த நெருக்கடிகளால் தூர தேசங்களில் தனது ஆக்கிரமிப்பையும் சுரண்டலையும் துறக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளான பிரிட்டன், அப்போது அதுவரை தான் கைப்பற்றி வைத்திருந்த தமிழர் தேசத்தின் இறைமையை, சிங்கள தேசத்துடன் பிணைத்தபடி, இந்தத் தீவின் பெரும்பான்மையினரான சிங்களவர்களிடம் கையளித்து சிறை வைத்து சென்றது.

அதன் விளைவைத்தான் வினையாக இந்தத் தீவு இன்றும் அறுத்துக்கொண்டு இருக்கின்றது.

இந்தப் பின்னணியைப் புரியாமல் பேசுகிறார் பிரிட்டிஷ் தூதுவர்.

தமிழர் தேசத்தின் இறைமையை மூன்று நூற்றாண்டு களுக்கு முன்னர் வல்வந்தமாக பிரிட்டன் பிடுங்கியபோது ஆக்கிரமிப்பு செய்தபோது அதை பேச்சு மூலமா அல்லது மென்போக்கிலா பிரிட்டிஷ் முன்னெடுத்தது? பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தனது படை வலிமைச் செருக்கைப் பல்லாயிரம் கடல் மைல்கள் கடந்து இந்தத் தீவின் மீதும் ஏவி விட்டே பிரயோகித்தே ஆயுத முனையில்தான் அதைக் கைப்பற்றியது.

தமிழர் தேசத்தின் இறைமையைக் கைப்பற்றித் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த காலத்திலும் சரி, பின்னர் அதை சிங்கள தேசத்திடம் சிறை வைத்தமை முதல் இன்று வரை, ஆட்சி அதிகாரத்தின் ஆயுத வலிமைக்குள்தானே தமிழரின் இறைமை சிக்கிக் கிடக்கின்றது......?

அதனை மீட்பதற்கு, தனக்கு நியாயம் பெறுவதற்கு, இன்று பிரிட்டிஷ் தூதுவர் போற்றுகின்ற வன்முறையற்ற அஹிம்சை வழியிலான போராட்டப் பாதையில் தமிழர் தேசம் சுமார் மூன்றரை தசாப்தங்கள் போராடியபோது, அது சிங்கள தேசத்தினால் ஆயுத வலிமை மூலம் படைப் பலாத்காரம் மூலம் முறியடிக்கப்பட்ட போது, சிங்கள தேசத்திடம் தமிழர் தேசத்தின் இறைமையைச் சிறைப் பறவையாக ஒப்படைத்துச் சென்ற வெள்ளைக்கார தேசம் என்ன செய்தது? குறைந்த பட்சம் தமிழர்களுக்காக அவர்கள் பக்கத்தில் இருக்கும் நியாயத்துக்காக குரல் கொடுக்க வேனும் முன்வந்ததா?

தான் தமிழர் தேசத்திடமிருந்து ஆயுத முனையில் வல் வந்தமாக பிடுங்கிக் கொண்ட இறைமையை, இப்போது மீட்பதற்காகத் தமிழர் தேசம் வேறு வழியின்றி கடைசி மார்க்கமாக அதே பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரிட்டன் கூறுவது எங்ஙனம் நியாயம்?

"மயிலே, மயிலே இறகுபோடு!" என்று கேட்டு, இறைஞ்சிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழர் தேசத்துக்கு சிபார்சு செய்வது அங்கு வாழ்பவர்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடனா? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.