Monday, April 3, 2017

கடவுளின் மரண வாக்குமூலம்......


சபிக்கபட்ட
இனமென்று
தெரிந்திருந்தும்
உன்னை நிமிர்த்திட
துடித்தேன் நான்.....

யாருக்கும் கிடைக்காத
பொக்கிசமாய்
அர்சுனனை மீண்டும்
உன் குடியில்
பிறக்கவைத்தேன்!
ஆயிரம் ஆயிரம்
அபிமன்யூக்களை
 உனக்கென்று
கொடுத்து வைத்தேன்!

சதுரங்க ஆட்டத்தின்
வித்தைகள் தெரிந்தவனை
உன் கூட்டத்தின்
தளபதியாக்கினேன்!

சுதந்திரத்தின் வாசம்
புரியட்டும் உனக்கு என்று
பறவைகளை உன்
வாசலுக்கு அனுப்பி
வைத்தேன்!

நல்ல எண்ணங்கள் -உன்
புத்தியில் வரட்டுமென
வாசனை மலர்களை
உன் வீட்டு வாசலில்
வைத்தேன்!

கிடுகு வேலிக்குள்
சண்டியனாய்
வளர்ந்தாய் - நீ!

வடக்கென்றும்
கிழக்கென்றும்
தீவென்றும்
வன்னியென்றும்
யாழ்ப்பாணம் என்றும்
பிரிவுகள் பல பேசி
கோமணமும் இல்லாது
அம்மணமாய்
நின்றாய் - நீ!

சாதியென்றும்
மதமென்றும்
தற்பெருமைகள் பேசி
உனக்கு நீயே
மகுடங்கள்
சூடிக்கொண்டாய்!

தலையனை சுகமே
பெரிதென
இருந்தாய்!!
கடவாய் வழிய
படுத்திருத்தல்
சொர்க்கமென
 கிடந்தாய் !!.

அர்சுனர்களின்
ஆட்டம்
உனக்கு சினத்தை
தந்தது!

எவன் செத்தால்
எனக்கென்ன
நான் தப்பினால்
போதும் என
ஓடித்தப்பினாய்...


அர்ச்சுனன் வீரம்
கண்டு
உலமே வியந்து
நின்றது.
உனக்கு மட்டும்
முற்றத்து
மல்லிக்கையின்
மகத்துவங்கள்
புரியவேயில்லை!


கர்ப்பூர வாசனை
தெரியா கழுதையாய்
கிடந்தாய்!!

உனக்காக
உன் பிள்ளைக்காக என
கந்தகம் சுமந்து
நீறாகிபோயினர்
அபிமன்யூக்கள்!!


வாழ்வியலின்
அர்த்தம்
புரியட்டும் என்று
கல்வித்தாயை
வரமாய்
கொடுத்தேன் -உனக்கு.

நீ போதை
தலைக்கேறி
மதம் கொண்டு
திரிந்தாய்!
பிரிவுகள் பல
சொன்னாய்
அடிமையாய் கிடப்பதே
சுகமென கிடந்தாய்!

மெத்தப்படித்த
செருக்கு உனக்கு!
கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாதென
யாரோ சொன்னது.
நந்திக்கடல் அலையின்
ஓசையிலும்
எனக்கு
நன்றாய் கேட்டது.

உன்னைக் காப்பாற்ற
முடியா விரக்தியில்
நானும் அர்ச்சுனர்களும்
நந்திக் கடலில்
இறங்கி,
தூர நடந்தோம்...
பெரிய அலையொன்று
எங்களை விழுங்கியது.

அர்ச்சுனர் கூட்டம்
அமிழும் நிலையிலும்
தாகத்திற்க்கு
தமிழீழம்
கேட்டது!
கொடுத்துவிடலாம் என
ஒரு கணம் நினைத்தேன்!

திரும்பிப் பார்த்தேன்..

நந்திக்கடலின்
ஆர்பரிப்பில்,
தப்பிய
தறுதலையொன்று

தலையாட்டியாய்
மாறி நின்றது!

எருமைவழிப்
பிறப்பொன்று
சொந்த சகோதரிகள்
மார்புக்குள்
வெடிகுண்டு தேடியது!


இன்னொன்று
செத்த பிணங்களை
புணர்ந்து கொண்டது!

வெள்ளைவேட்டிக்
கனவில்
நாயாய்
நக்கிநின்றது
இன்னொன்று!


நாசமாய் போகெட்டும்
இந்தக் குடியென
மனமார திட்டிவிட்டு
நந்திக்கடலில்
நானும் இறந்தே
போனேன்!

ஆம்
கடவுள் நான்
இறந்துபோனேன்
மே 18இல்!!

Sunday, January 1, 2017

செல்வரத்தினம் செல்வகுமார் - நினைவுப்பகிர்வுகம்பீரமான நிமிர்ந்த நன் நடை , எவரையும் இலகுவில் வசீகரிக்கும் அழகிய தோற்றம், எப்போதும் கலகலப்பான வெள்ளைச்சிரிப்பு இவை எல்லாவற்றிற்க்கும் சொந்தக்காரன் எங்கள் செல்வா. 1985 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் கொக்குவில் இந்துவின் வாசலை கடக்கும் ஓவ்வோருவரும் எங்கள் செல்வகுமாரையும் கடந்தே சென்றிருப்பீர்கள். 

ஒரு வெள்ளை அழகிய மாணவன் ஒரு புன்சிரிப்போடு உங்களுக்கு வழிகாட்டி இருப்பான் அல்லது கல்லூரி பூந்தோட்டத்தில் ஏதாவது செய்து கொண்டிருப்பான்.

செல்வரத்தினம் விக்னேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாய் 14-02- 1974 ம் ஆண்டு செல்வகுமார் பிறந்தான். தனது ஆரம்ப கல்வியை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையிலும் உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்தான்.

இயல்பாகவே அவனிடத்தில் ஓர் ஆளுமை இருந்தது  எல்லா  மாணவர்களையும் ஆசிரியர்களையும் இலகுவில் வசீகரிப்பவனாக இருந்தான்...  தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடியவனாக சக மாணவர்களுக்கு ஓர் பெரியண்னாக இருந்தான்.  அவன் நடையில் ஓர் மிடுக்கிருக்கும்....    

கொக்குவில் இந்துக் கல்லூரி பெற்ற மிகச்சிறந்த மாணவர்களில் அவனும் ஒருவன் , கல்லூரியில் சேவைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் செயற்பாடுகளில் மிகவும் அர்பணிபுடன் செயற்பட்டான். பிறருக்கு சேவை செய்வதென்பது அவனுக்கு எப்போதும் விருப்பாமான பணி. 

கல்லூரியை தனது சொந்த வீடுபோல் உரிமை கொண்டாடுவான். கல்லூரியை அழகுபடுத்தும் பூஞ்சோலையை உருவாக்க பெரிதும் பாடுபட்டான். இன்றும் கல்லூரி பூஞ்சோலையில் உள்ள மரம் செடிகளில் பூ மலர்வது எங்கள் செல்வகுமாரின் கல்லறைக்கென்பது அவனை நேசித்த அவன் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். 

அவனது சேவைகள் கல்லூரிக்கு வெளியேயும் தொடர்ந்தது. ....

அவனுள் பல துறைசார்ந்த திறமைகள் இருந்தன. கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டுதுறையிலும் அவன் சிறந்து விளங்கினான். சமூக சேவை செய்யும் நற்குனமுள்ள ஓர் மாணவனாய் கல்லூரியில் அவன் இனங்காணப்படிருந்தான்....

எல்லா நண்பர்களுக்கும் விருப்பமான தோழனாக , வயதில் குறைந்த மாணவர்களுக்கு  வழிகாட்டியாக , தாய் தந்தையருக்கு நல்லதொரு மகனாக தான் நேசித்த மக்களுக்காக உயிரையும் கொடுக்க துணிந்த வீரனாக என பல பரிணாமங்களில் எமக்கு அறிமுகமானான் செல்வா.

பின்னாளில் காலப்பணி கருதி கல்லூரியில் இருந்தும் எம்மில் இருந்தும் மிகவும் தூரம் போயிருந்தான். 

அவனது ஆளுமைகள் மேலும் மெருகேறி தமிழருக்கான நிர்வாக அலகுகளில் அவன் பணி நிலைத்திருந்த போதுதான் அந்த துயரமும் நடந்து முடிந்தது. சூரியகதிர் சுட்டெரிக்க அதில் கலந்து எம் நெஞ்சமெல்லாம் நிறைந்து போனான்  எங்கள் செல்வகுமார்.

தனக்கு விருப்பமான பிறருக்கு சேவை செய்யும் பணியினை விருப்போடு ஏற்று அதற்காகவே வாழ்ந்து எங்கள் மனங்களில் நிறைந்துபோனான் எங்கள் வீரவேங்கை செல்வன்....


செல்லமாய் வளர்ந்த பிள்ளை  -எங்கள்
கொக்குவில் இந்துவின் செல்ல(வ)ப் பிள்ளை
தமிழுக்காய் உயிர் தந்த 
விடுதலை புலிப்பிள்ளை!!

நிமிர்ந்து நீ நடந்தால் 
திசை எட்டும் கை கட்டும்.
உந்தன் வெள்ளை சிரிப்பொலியில்
வகுப்பறைகள் களைகட்டும்.

நினைவெல்லாம் நீ நிறைந்தாய்
மனமெல்லாம் நீ மலர்ந்தாய்
உயிரேல்லாம் நீ நிறைந்தாய்
எங்கள் உணர்வோடு நீ கலந்தாய்

நீ இல்லை என்று யார் சொன்னார்?
செல்வரத்தினம் பெற்ற செல்வமே!
யாருக்கும் கிடைக்காத சொந்தமே!
வாராது போல் வந்த  மாமணியே!

மைதான புழுதிகளில் -இன்னும்
உந்தன் வாசம்!
கல்லூரி வாசல் கடக்கையில் - தென்றலாய்
உந்தன் மூச்சுக்காற்று!

தாய்மொழிபோல் நிலைத்து 
நீ நிற்ப்பாய்
எந்தன் வாய்மொழி 
பொய்க்காது!


Wednesday, November 16, 2016

திருப்புகழ்ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
     ஏழையை மோழையை ...... அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
     வாய்மையி லாதனை ...... யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவது ...... மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயி ...... லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
     தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்

     சீரலை வாய்வரு ...... பெருமாளே.

Tuesday, April 7, 2015

விமர்சனம்

முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து இன்று பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று எம்மில் பலர் விடுதலைப்போராட்டத்தை வெளிப்படையாகவே கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்ப்பட்ட ஓர் விவாதத்தின் மீதான எதிர்வினை......

என்னைப்பொறுத்தவரை இவர்களுக்கு வரலாறு தெரியாமல் இல்லை. தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்கள். தங்கள் வாதத்திற்க்கு ஏற்றவாறு வராலாற்றின் சில பகுதிகளை மட்டும் வைத்து தமது வாதங்களை வைக்கின்றனர்.  உதாரணமாக நீலன் திருச்செல்வம் , கதிர்காமர் , அமிர்தலிங்கம் ,துரையப்பா போன்றோருக்காக உருகும் இவர்கள் கண்களுக்கு குமார் பொன்னம்பலம் , ரவிராஜ், ஜோசப் பரராசசேகரம் , தினமுரசு குகன், தாரகி போன்றோர் தெரிவதில்லை அல்லது மறந்துவிடுகின்றனர்.

யாரோ பெயர் தெரியாதவன்  , அவன் என்ன காரணத்திற்காக சுடப்பட்டான் என தெரியாமலே விடுதலை புலிகள் மீது குற்றம் சுமத்தும் இவர்களுக்கு தங்கள் கண்முன்னே  இறந்த அல்லது இவர்களுக்கு தெரிந்த நண்பர்களின் உறவினர்களின் வலியிலும் வேதனையிலும் பங்கேற்க்கும் துணிவுகூட இல்லாதவர்கள்  அல்லது அவர்களின் கொள்கைகளை கிண்டலடித்து அவர்களுக்கு மேலும் மனவேதனை மட்டுமே உருவாக்கும் புண்னியவான்கள்.

இவர்களை புரிந்துகொள்ளுதல் மிகசுலபம்.....

எமது சமூகம் இரண்டாக பிரிந்துகிடக்கின்றது.

முதல் வகையினர் ..........இலங்கை அரசபயங்கரவாததினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளானவர்கள். அவர்கள் காலம் காலமாய் அவலங்களை சுமந்து தங்கள் அவலங்களுக்கான ஒரே தீர்வு தமிழிழம் ஒன்றே என்பதை  எத்தனை முள்ளிவாய்கால்கள் வந்தாலும் உறுதியாய் நம்புவர்கள்.  இவர்களின் கனவுக்கு வடிவம் கொடுத்தவர்கள் விடுதலை புலிகள் என்பதால்  அவ்வியக்கத்தை கேள்விகளுக்கு அப்பால் உறுதியாய் ஆதரிப்பவர்கள்.

இவர்களின் நோக்கம் மிகவும் தெளிவானது. அதனால் இவர்கள். சிறு சிறு சலசலப்புகளை கண்டு துவண்டுவிடமாட்டார்கள்.........

தங்களின் அவலங்கள் எதிர்கால தங்களின் சந்ததியினரும் ஏற்படுவிடக்கூடாது என்பதில் மிகத்தெளிவாய் இருப்பவர்கள்.....

ஓர் விடுதலை இயக்கத்தை உருவாக்கி , தாங்கள் விரும்பிய தமிழிழத்தின் மாதிரியை உருவாக்கி அதற்க்குள் வாழ்ந்து பார்த்தவர்கள்.....

இரண்டாவது வகையினர்  ...........தம்மை நடு நிலையினராய் முன்னிறுத்துவர்கள். இவர்கள் போர் காலத்தின் போதும் அதற்க்கு பின்னரும் எவ்வகையிலும் பாதிக்கப்படாதவர்கள்.  அரசாங்க உத்தியோகத்திலோ , வெளிநாடுகளில் இருந்தோ வருவாயை பெற்றுக்கொண்டு ஒரு உயர்தர வாழ்க்கைக்கு தம்மை பழக்கபடுத்திக்கொண்டோர். இவர்கள்  தமிழிழத்தின் தேவையை உளமார உணர்ந்தவர்களிள்லை.  இவர்கள் கேள்விகள்  கேட்க மட்டுமே தெரிந்தவர்கள். தங்களுக்காய்  எந்த ஒரு அரசியல் தலைமையும் உருவாக்கிகொள்ளும் தகமைகூட இல்லாமல் முதலாவது  வகையினர் உருவாக்கிய விடுதலை இயக்கத்தின் மீது முட்டையில் மயிர்புடுங்கும் வேலையை செவ்வனே செய்ய மட்டுமே தெரிந்தவர்கள்.

இன்று  போர்முடிந்து  5வருடங்கள் முடிந்த  நிலையிலும்  விடுதலை புலிகளை வைத்தே அரசியல் பேசி எந்த விதமான ஆக்கபூர்வமான காரியங்களிலும் ஈடுபடாது வெறும் வாய்பேச்சு வீரர்களாய் உலவும் உத்தமர்கள்.........

இவர்களுக்கு இலங்கை அரசு எதிரியும் இல்லை ஆனால் நண்பனும் இல்லை என்னும் இரண்டான் கெட்டான் நிலை. ஒரு விதமான திருசங்கு நிலையினர்.....

விடுதலை  புலிகள்  விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டவர்களா?

இல்லை , விடுதலை புலிகள் மீதும் தவறுகள் உள்ளன , 1995ம் ஆண்டுவரை அது ஒரு இராணுவ இயக்கமாக மட்டுமே இருந்தது , வன்னி நோக்கிய 1995ம் ஆண்டின் இடப்பெயர்வின் பின்  அது தன்னை ஒர் மக்கள் இயக்கமாக மாற்றிக்கொண்டது.  அதன்  பின்னர் எதிரியின் உளவாளிகளுக்கான  தண்டனை இராணுவ நீதிமன்றமே தீர்மானித்தது.......

முதல் முறையாக முஸ்லீம் மக்கள் வெளியேற்றதிற்காக மன்னிப்புக் கோரியது.....  இவ்வாறு தவறுகளில் இருந்து தன்னை திருத்திக்கொண்டு ஒர் புதிய பாதையில் பயணித்தது.....

விடுதலை புலிகளின் மீதான இன்னோரு விமர்சனம் TELO மீதான தாக்குதல்....

இதுவும் விமர்சனக்களுக்கு அப்பால் ஓரு தவறான முடிவே!... அவர்கள்  தாக்குவதற்க்கு தயராய் இருந்தார்கள் அதனால் விடுதலை புலிகள் முந்திக் கொண்டார்கள் என்பது  விடுதலை புலிகளின் வாதமாய் இருந்தாலும் அதை இவ்வளவு கடுமையாக செய்திருக்க வேண்டியதில்லை.....

TELO வின் கீழ் மட்ட போரளிகள் பலர் தமிழீழம் எனும் கனவுடனேயே ஆயுதம் ஏந்தினர்....  அவர்கள் கொல்லப்பட்டு வீதிகளில் எரிக்கப்பட்டது எவ்வகையிலும் எற்புடையதல்ல........


புலிகளின் தவறுகளை முன்னிறுத்தி  தங்களை மனிதநேய ஆர்வலர்களாக  நிலைநாட்ட முற்படுபவர்கள்  பாதிக்கப்பட்ட மக்களுக்காக  உழைக்க  முன்வருவார்களானல் அது பாராட்டுக்குரியது. அதைவிடுத்து  கேள்வி கேட்டு பரிசில் வாங்கும் புலவர்களாக மட்டும் இருந்தால் அது வேதனைகுரியதே!........

ஆயுதம் ஏந்தி போராடியவன் மட்டுமே விடுதலையை நேசிக்க வேண்டும் எனும் கருத்தை நான் ஒரு விவாத பொருளாகவே எடுத்துக்கொள்ளவே விரும்பவில்லை எனென்றால் என்னைப்பொறுத்தவரை அது ஒரு குதர்க்கம்.  எந்த அடிப்படையும் அற்றது.....

இறுதியாக விடுதலையின் பொருள் தெரியாதோர் , அடுத்தவரின் மனவலிகளை உணர்ந்து கொள்ளும்  பக்குவமற்றோர் யாராயினும் உங்களால் முடியாவிட்டால் ஒதுங்கி விடுங்கள்.

போகும் பாதையும் இலட்சியமும் எங்களுக்கு தெளிவானது........

Tuesday, November 11, 2014

அணுகுண்டு

புலிவருது! புலிவருது கதையாக, ஒருவழியாக அணுகுண்டு வந்தே விட்டது. ஜூலை 1ம் தேதிதான் அந்த ஆசை நிறைவேறியது. ஹிரோஷிமா போகிறேன் என்று நண்பர்களிடம் கூறியதுமே, ஆளாளுக்கு பில்டப் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். 'அங்கே சென்றால், நீங்கள் அழாமல் வரமாட்டீர்கள்' என்றார் ஒருவர். 'அடப்போங்கப்பா! நானாவது, அழுவதாவது! எங்கள் வீட்டிலேயே என்னைத்தான் கல்நெஞ்சக்காரன் என்பார்கள். இந்த முப்பது வருடங்களில் துயரச் சம்பவங்களுக்காக ஓரிரு முறைகள்தான் அழுதிருப்பேன். நீங்கள்தான் சந்தோஷமோ, துக்கமோ, எதற்கெடுத்தாலும் அழுது விடுகிறீர்கள். எல்லோரும் அப்படியேவா இருப்பார்கள்? என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே!' என 'பந்தா' விட்டுக் கொண்டிருந்தேன். இதில் அதிகமாகப் பயமுறுத்தியது, அணுகுண்டு வெடித்தபோது ஹிரோஷிமாவுக்கு அருகில் வாழ்ந்த மஸாமிட்சு - நொரிகோ தம்பதியினர்தான். ஹிரோஷிமாவையும் இரண்டாம் உலகப்போரையும் பற்றிப் பல சுவாரசியமான தகவல்களைக் கூறினார்கள். அவற்றை இக்கட்டுரையில் ஆங்காங்கு கலந்துள்ளேன்.
எங்கள் அலுவலகத்துக்கு அருகில் ஒரு நடைப்பயிற்சிப்பாதை (Walking Trail) இருக்கிறது. வாகனங்கள் எதுவும் குறுக்கிடாத, அழகான செர்ரிப்பூக்கள் பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்த அப்பாதை பார்க்க ரம்மியமாக இருக்கும். மாலை நேரம் மழை பெய்து முடிந்த பிறகு அவ்வழியில் வர நேரிட்டால், மரத்தடியில் சற்று அமர்ந்து இரசித்து விட்டு வருவது வழக்கம். சரியாக நான் அலுவலகம் முடிந்து திரும்பும் நேரத்தில், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மஸாமிட்சு - நொரிகோ தம்பதியினர் எதிர்ப்படுவார்கள். தாத்தாவுக்கு 75 வயது. பாட்டிக்கு 77. இந்தத் தள்ளாத வயதிலும் தினமும் இரண்டு மணிநேரம் நடப்பது என்பது நம் ஊரைப் பொறுத்தவரை வேடிக்கை. ஆனால் இவர்களுக்கு வாடிக்கை. உணவுகளும் உடல்வாகும் உடற்பயிற்சியும்தான் காரணம்.மாலை வேளைகளில் நீச்சல் பயிற்சிக்குப் போகும்போது, என்னைவிட வேகமாக நீச்சலடிக்கும் 70+ வயது தாத்தாக்களைப் பார்த்தால், சற்றுப் பொறாமையாகக்கூட இருக்கும். ஓய்வு இடைவேளைகளின்போது இவர்களிடம் பேச்சுக் கொடுத்தால், ஜப்பானைப் பற்றிப் பல்வேறு எழுதப்படாத வரலாறுகள் வெளிவரும். இன்றைய இளைய தலைமுறை தமிழ்மீது ஆர்வமே இல்லாமல் இருக்கிறது என்று நாம் புலம்புவதைப் போல், இவர்களும் புலம்புகிறார்கள். இப்போதுள்ள ஜப்பானிய இளைஞர்கள் தப்பும் தவறுமாகத் தாய்மொழியைப் பேசுகிறார்களாம். சரியாகப் பேசவேண்டும் என யாருக்கும் அக்கறை இல்லையாம். பல்வேறு சொற்கள் வழக்கிழந்து, ஆங்கிலம் கலந்து வருகிறதாம். இதனால் நாளடைவில் மொழி என்னவாகுமோ எனக் கவலைப்படுகிறார்கள். அதிலும் இந்தப் பெண்பிள்ளைகள் மேற்கத்திய மோகத்துக்கு அடிமையாக ஆரம்பித்து, பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் குறைந்து வருகிறதாம். 'வீட்டுக்கு வீடு வாசற்படி' என நினைத்துக்கொண்டேன். 'நீங்கள் ஹிரோஷிமா செல்லும் நாளை உங்களால் மறக்கவே முடியாது. உணர்ச்சிகரமான ஒரு நாளாக அமைந்து விடும்' என்று அங்கு சந்தித்த ஒரு பாட்டி சொன்னார்.

ஒருவழியாக அந்த நாளும் வந்தது. ஓஸகாவிலிருந்து ஹிரோஷிமா செல்லும் மலைப்பாதை மிக அழகாக இருக்கும் என்றார்கள். எனவே, பகல்நேரப் பேருந்தில் முன்பதிவு செய்து கொண்டேன். நண்பர் கூறியபடி, காலை ஆறு மணிக்கே வருணபகவான் தலையைக் காட்ட ஆரம்பித்திருந்தார். ஏழு மணிக்குப் பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் ஏறி அமர்ந்ததும் மழை வலுக்க ஆரம்பித்திருந்தது. மழையில் நனையாத இடத்தில் இருந்து கொண்டு, கனமழையை ரசிப்பதில் உள்ள ஆனந்தமே தனி. மலை மீது ஏறிச் செல்லும்போது இயற்கையெனும் இளையகன்னியை ரசித்துக் கொண்டும், கணவாய்களுக்குள் செல்லும்போது, இருட்டறையில் அமர்ந்திருப்பது போலவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மலைப்பாதைதான் என்றாலும், பேருந்து அப்படி ஒன்றும் மெதுவாகச் செல்லவில்லை. வழக்கமான 90 கி.மீ வேகத்தில்தான் சென்றது.

முதன்முதலில் பார்வையாளர்களை வரவேற்பது அணுகுண்டு வீச்சிலிருந்து ஓரளவு தப்பிப்பிழைத்த ஹிரோஷிமா மாநகரத் தொழில் வளர்ச்சி மையக் கட்டடம்தான். அதற்கு அடுத்து இருப்பது குண்டு வீச்சில் இறந்த சுமார் 3,20,000 பொதுமக்களுக்கும் 40,000 க்கும் மேற்பட்ட போர்வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம். அடுத்ததாக, அணுகுண்டின் பயங்கரத்தை விளக்கி நிற்கும் அருங்காட்சியகம்.
அமைதியை வலியுறுத்தும் நினைவுச்சின்னம்
ஹிரோஷிமாவின் மீது அணுகுண்டு போட்டது ஏதோ ஓரிரு நாட்களில் எடுக்கப்பட்ட முடிவோ, தற்செயலாகவோ அல்லது தவறுதலாகவோ நிகழ்ந்தது அல்ல. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலப் பின்னணி இருக்கிறது. ஹிரோஷிமாவின் மீதான அணுகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை மட்டும் காலவாரியாகப் பின்னோக்கிச் சென்று பார்ப்போம்!

கி.பி 1853
20 ஆம் நூற்றாண்டின் நடுவில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருந்தாலும், அதற்கான விதை விதைக்கப்பட்ட ஆண்டு 1853. இந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம்தான் சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்பங்களில் அதிவேகமாக வளர்ச்சி அடையவும், ஆசியாவின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கவும் வழி செய்தது. அதுவரை, மேற்கத்திய நாடுகளுடனான வர்த்தக உறவுகளுக்குத் தடைவிதித்துத் தனக்குத்தானே விலங்குகளை மாட்டிக்கொண்டிருந்த ஜப்பான், தனது பலவீனங்களை உணர்ந்து, மற்ற நாடுகளுடன் இணைந்து செல்ல முடிவெடுத்தது. இந்த ஆண்டு ஜூலை மாதம்தான் மாத்தேயு சி.பெர்ரி (Matthew C.Perry) என்ற மாலுமி, டோக்கியோவிலுள்ள எடோ துறைமுகத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதியாக வந்து இறங்கினார். கனகவா ஒப்பந்தம் (Treaty of Kanagawa) நிறைவேற்றப்பட்டு, மற்ற நாடுகளுடனான வர்த்தக உறவு மலர்ந்தது.

கி.பி 1895
சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த தனது கலாச்சாரத்தின்மீது மிகவும் பற்று கொண்டிருந்த ஜப்பான், உலகிலேயே தலைசிறந்த கலாச்சாரம் தங்களுடையதுதான் என்ற மிதப்பில் இருந்து வந்தது. ஆனால், பொருளாதாரத்திலும் படைபலத்திலும் பின்தங்கி இருப்பதையும் உணர்ந்து இருந்தது. இவைதான் அதன் பலவீனமும் பலமும். உலக நாடுகளுடன் தொடர்பு ஏற்பட்ட 40 வருடங்களிலேயே, வியத்தகு மாற்றங்கள் காணப்பட்டன. தலைவர்களின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களும், இங்கிலாந்தின் கடற்படைப் பயிற்சியும், ஜெர்மனியின் தரைப்படைப் பயிற்சியும், தேசவெறியைத் தூண்டி இளைஞர்களைப் படையில் சேரவைக்கும் தலைவர்களின் பேச்சாற்றலும், வல்லரசு நாடாக உருவெடுக்கப் பெரிதும் காரணமாக இருந்தன. தன்னுடைய படைவலிமையைப் பரிசோதித்துப் பார்க்க எண்ணி, இந்த ஆண்டு தகுந்த காரணமே இல்லாமல் தன் அண்டைநாடான கொரியாவின் மீது படையெடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றிக் கொண்டது.

கி.பி 1904
கொரியாவின் மீதான இத்தாக்குதல் உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளித்தாலும், 1904ல் இன்னொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. இன்னொரு அண்டைநாடான ரஷ்யாவின் மீது போர் தொடுத்தது. படைவலிமையில் ஜப்பானைவிட ரஷ்யா பலமடங்கு பலம் பெற்றிருந்த போதிலும், ஜப்பானியர்கள் கைக்கொண்ட கொரில்லாப் போர்முறையைச் சமாளிக்க முடியாமல் திணறியது. யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சுமார் இரண்டு ஆண்டுகள் இழுத்துக் கொண்டே இருந்தது. பின்னர் 1906ல் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் தலையிட்டு இரு தரப்புகளுக்கும் சாதகமான முறையில், ரஷ்யாவின் பகுதிகள் எதுவும் கைப்பற்றப்படாமலும், வல்லரசு அந்தஸ்தை ஜப்பானுக்கு வழங்கியும் போரை முடித்து வைத்தார்.

முதல் உலகப்போர்
அதன்பின் சிலகாலம் போர் விவகாரங்களில் அடக்கி வாசித்துக்கொண்டு, உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்த ஜப்பான், 1914ல் முதல் உலகப்போர் ஆரம்பித்த பின்னும் போரில் குதிக்கவில்லை. பின்னர் 1917ல் ஜெர்மனியின் தோல்வி தவிர்க்க முடியாதது என்ற நிலைமை ஏற்பட்ட பின்னர்தான் சில பல லாப நட்டங்களைக் கணக்கிட்டு, நேசநாடுகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கியது. பசிபிக் பகுதியில் ஜெர்மனி கைப்பற்றியிருந்த தீவுகளையும் துறைமுகங்களையும் கைப்பற்றி வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த ஜப்பானின் கணக்கு வேறுவிதமாக முடிந்தது. போரின் முடிவில், ஒரு சில தென்பசிபிக் தீவுகளை மட்டுமே தன்னுடன் இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்ற தீவுகளும் துறைமுகங்களும் அந்தந்த நாடுகளுக்கே திருப்பித் தரப்பட்டன.
முதல் உலகப்போருக்குப்பின்
போர் முடிந்த சில வருடங்களிலேயே, மற்ற உலக நாடுகள் தங்களுக்குள் அளித்துக்கொண்ட அளவு ஆதரவை ஜப்பானுக்கு அளிக்காததைத் தலைவர்கள் உணரத்தொடங்கினர். மீன்வளம் மட்டுமே உடைய இவர்களுக்கு மற்ற எல்லா வளங்களையும் வெளிநாட்டிலிருந்து தருவிக்க வேண்டியிருந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வர்த்தகத் தடைகளின்போது பட்ட சிரமங்கள் மற்ற நாடுகளுடனான சுமுகமான உறவின் அவசியத்தை உணரவைத்தது. ஆனால் அதேசமயம், பெருகிவரும் மக்கள்தொகையைக் குட்டித்தீவு தாங்கமுடியாமல், பொருளாதாரம் சீர்குலையத் தொடங்கியது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களுக்கும் இயந்திரங்களுக்கும் வெளிநாடுகளை நம்பி இருந்ததால், தொழில்கள் நசியத் தொடங்கின. ஆகவே, சீனா, சிங்கப்பூர் முதலான மற்ற நாடுகளின் மீது படையெடுத்து, அங்கிருந்து செல்வங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் கி.பி 1939ல் இரண்டாம் உலகப்போர் மூண்டது.

கி.பி 1939
இங்கிலாந்தும் பிரான்சும் போர் அறிவிப்பை வெளியிட்ட இந்த ஆண்டுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் குழு அதிபயங்கர விளைவுகளை விளைவிக்கக்கூடிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்தது. 1938ல் ஜெர்மனி அணுவைப் பிளக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது. ஜெர்மனியின் நாஜிப் படையினரால் துரத்தப்பட்டு, அமெரிக்காவிடம் தஞ்சம் புகுந்த யூத விஞ்ஞானிகளுடன் லியோ ஸிலார்டு (Leo Szilard) என்பவரும் சேர்ந்து, ஐன்ஸ்டீனைச் சமாதானப்படுத்தி, அதிபர் ஃப்ரான்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுத வைத்தனர். உடனடியாக ஒப்புதலும் அளிக்கப்பட்டு, அணு ஆயுதங்களை எப்படித் தயாரிப்பது என்ற ஆய்வு தொடங்கப்பட்டது.

கி.பி 1941
போர் தீவிரமடைந்து விட்ட நிலையில், தாக்குதல்களும் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் மாறி மாறி நடைபெற்றன. ஜப்பான் பிலிப்பைன்ஸ் மீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா பிலிப்பைன்ஸுக்கு உதவுவதாகக் கூறியிருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜப்பானும் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தன. இந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரம் ஹிரோஷிமா கடற்படை மையத்திலிருந்து சரமாரியாகப் போர் விமானங்கள் ஹவாய் தீவை நோக்கிப் பறக்க ஆரம்பித்தன. சங்கேத வார்த்தையான 'East Wind, Rain' (மேற்கு நாடுகளுடனான பேச்சுவார்த்தை முறிந்து விட்டது என்று பொருள்) என்ற செய்தி கிடைத்ததும், 359 விமானங்கள் பேர்ல் ஹார்பர் (Pearl Harbour) துறைமுகத்தின்மீது குண்டுமழை பொழிய ஆரம்பித்தன. பிலிப்பைன்ஸைக் காப்பதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த கடற்படை சின்னாபின்னமாகியது. இதைச் சற்றும் எதிர்பாராத அமெரிக்கா ஒரு கணம் தடுமாறி, பின் சுதாரித்துக் கொண்டது.


ஹவாய் துறைமுகத் தாக்குதல்

கி.பி 1942
முதல் கட்ட ஆய்வு முடிவடைந்ததும், ஆயுதம் தயாரிக்கும் பணி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. நியூயார்க் நகரத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டதால், மான்ஹாட்டன் திட்டம் என்ற பெயரும் சூட்டப்பட்டது. மூன்றாண்டுகள் எடுத்துக்கொண்ட இப்பணிக்காகச் செலவழிக்கப்பட்ட தொகை 200 மில்லியன் டாலர்கள். இவ்வணு ஆயுதங்களின் மூலம் போர் முடிவுக்கு வருமானால், ரஷ்யாவும் ஜப்பானும் இணைவதும், ரஷ்யாவின் அதிகாரப் பரவலும் தடுக்கப்படும். அது அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்ற காரணத்தை எடுத்துச்சொல்லி, அமெரிக்க மக்கள் மற்றும் செனட் உறுப்பினர்களிடம் இவ்வளவு பெரிய தொகைக்கு ரூஸ்வெல்ட் அனுமதி பெற்றார்.

கி.பி 1943
அணுகுண்டைத் தயாரித்தபின் அதை எங்கு எப்படிப் பயன்படுத்துவது என அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆலோசனை நடத்தினர்.


ஜெர்மனியும் ஜப்பானும் பட்டியலின் முதலிடத்தில் இருந்தன. போரை நிறுத்த வேண்டுமானால், பின்வரும் மூன்று நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்த வேண்டும்.
1. ஜப்பானைக் கைப்பற்றி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது.
2. மன்னராட்சி முறையைத் தொடர அனுமதியளித்து, ரஷ்யாவை ஜப்பானுக்கு எதிராகப் போரில் ஈடுபடச் செய்வது.
3. அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது.

இதில், ஜப்பான் இயற்கையால் பாதுகாக்கப்பட்டிருப்பதால், முதலாவது நிறைவேறுவது மிகவும் சிரமம். வலுவான ஜப்பானிய விமானப்படையுடன் வான் வழியாகவோ, சீற்றங்கள் நிறைந்த ஜப்பான் கடல் வழியாகவோ போரிட்டு ஜப்பானை வெற்றி கொள்வதென்பது முடியாத காரியம். இரண்டாவது நடவடிக்கையைக் கைக்கொள்வதால் ரஷ்யாவின் அதிகாரப் பரவலை ஏற்றுக்கொண்டு பணிந்து போவதைப் போல் ஆகிவிடும். ஆகவே, முதல் மற்றும் மூன்றாவது நடவடிக்கைகளை ஒன்றிணைத்து, ஜப்பான் மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்துவது என முடிவு செய்யப்பட்டது.

கி.பி 1944
இந்தத் தாக்குதலுக்கு முன்னோட்டமாக, அமெரிக்கா ஜப்பானிய நகரங்களின் மீது தொடர்ந்து குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. டோக்கியோ நகரத்தில் மட்டும் ஒவ்வொரு 2 மீட்டருக்கும் ஒரு குண்டு வீதம் போடப்பட்டு, மொத்த நகரமும் தரைமட்டமாக்கப்பட்டது. இப்போதிருக்கும் டோக்கியோவின் அதீத வளர்ச்சி, கடந்த 60 ஆண்டுகளில் நன்கு திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல, 60 ஆண்டுகளில் உலகின் முன்னணி நகரமாக, டோக்கியோ டவர் (பாரீசில் இருக்கும் ஈஃபில் டவரைப் போலவே, ஆனால் அதைவிடப் பதிமூன்று மீட்டர்கள் அதிக உயரத்துடன்) என்ற பிரம்மாண்ட நினைவுச்சின்னத்துடன் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது.


டோக்கியோ டவர் - உயரம் 333 மீட்டர்கள். ஈஃபில் டவரின் உயரம் 320 மீட்டர்கள்.

கி.பி 1945
ஏப்ரல் 12ம் தேதி ஜனாதிபதி ரூஸ்வெல்ட் காலமானார். ஹாரி ட்ரூமன் அதிபராகப் பொறுப்பேற்றார். மான்ஹாட்டன் திட்டம் மிக ரகசியமாக நடந்து வந்ததால், இதற்கு முன் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ட்ரூமனுக்கு இதைப்பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், இதைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்தார். போர் பற்றிய அமெரிக்க மக்களின் கவலை இந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் எதிரொலித்தது. எப்படியாவது போரை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவுக்குப் புதிதாகப் பொறுப்பேற்கும் அதிபர் தள்ளப்பட்டார். எனவே, அணு ஆயுதத் தயாரிப்பு தொடர முடிவு செய்யப்பட்டது.


ஏராளமான பொருட்செலவுடன் மூன்றாண்டுகளில் தயாரான அணுகுண்டை இந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி அமெரிக்கா சோதனை செய்தது. Trinity என்று பெயரிடப்பட்ட இந்தச் சோதனை, நியூ மெக்ஸிகோ மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனத்தின் மத்தியில் நடத்தப்பட்டது. அணுகுண்டின் வெடிதிறன் எவ்வளவு இருக்கும் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வெறும் ஊகங்கள்தான் உலவிக்கொண்டிருந்தன. அணுவிஞ்ஞானி எட்வர்ட் டெல்லர் அதிகபட்சமாக சுமார் 1,000,000 டன் டி.என்.டி அளவுக்கு இருக்கும் என ஊகித்திருந்தார். சோதனைக்குப்பின், ஒரு அணுகுண்டினால் சுமார் 20,000 டன் டி.என்.டி அளவுக்குச் சேதம் விளைவிக்க முடியும் எனக் கண்டறிந்தனர்.
ஏன் ஹிரோஷிமா மீது?
ஜூலை மாதம் சோதனை நடத்துவதற்கு முன்பே அமெரிக்கா குண்டு போடுவதற்கான இடங்களைத் தேர்வு செய்து வைத்திருந்தது. இதற்காக, ஓஸகா, கியோத்தோ மற்றும் டோக்கியோ உட்பட, 17 நகரங்கள் பட்டியலிடப்பட்டன. பின்னர், ஒவ்வொரு நகரத்தின் மக்கள்தொகை மற்றும் ஏற்படப்போகும் பாதிப்புகளின் அடிப்படையில், மே 11ம் தேதி, அதிலிருந்து நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஹிரோஷிமா, கொக்கூரா, நீகத்தா மற்றும் நாகசாகி. 1944 முதல் ஜப்பானின் மீது தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வந்த அமெரிக்கா, அணுகுண்டின் பாதிப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட, இந்த நான்கு இடங்களின் மீது மட்டும் குண்டு வீச்சை நிறுத்தி வைத்தது. மக்கள் நெருக்கம் மிகுந்த போர்முனையாக இருக்க வேண்டும் என்பதால், முதல் இலக்காக ஹிரோஷிமா தேர்வானது. அங்கு பிறநாட்டுப் போர்க்கைதிகள் சிறை வைக்கப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.


மற்ற குண்டுகளைவிட, அணுகுண்டை வீசும் முறை சற்று வித்தியாசமானது என்பதால், விமானிகளுக்குச் சற்று பயிற்சி தேவைப்பட்டது. இதற்காக அமெரிக்காவிலிருக்கும் பாலைவனத்தில், தேர்வு செய்யப்பட்ட இலக்குகளை மாதிரியாகச் செய்து வைத்து, அணுகுண்டின் அளவுள்ள பூசணிக்காய்களை வீசிப்பார்த்துப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.


இப்பயிற்சி வெற்றிகரமாக முடிந்தவுடன், ஆகஸ்டு முதல் வாரத்தில் ஹிரோஷிமா மீது குண்டு வீச அமெரிக்கா எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டது. ஆகஸ்டு 2ம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 'பால் டிபெட்ஸ்' (Paul Tibbets) என்ற விமானியும், 'எனோலா கே' (Enola Gay) என்ற B-29 ரக விமானமும், அணுகுண்டிற்கு 'சின்னப்பையன்' (Little Boy) என்ற பெயரும் தேர்வு செய்யப்பட்டன. 29 இன்ச் விட்டமும், 126 இன்ச் நீளமும் 9700 பவுண்ட் எடையும் யுரேனியத்தை மூலப்பொருளாகவும் கொண்ட சின்னப்பையன் எனோலா கே விமானத்தில் பொருத்தப்பட்டான்.


ஹிரோஷிமாவின் மீது போடப்பட்ட அணுகுண்டுவிமானி பால் டிபெட்ஸ்

கி.பி 1945 ஆகஸ்டு 6 நள்ளிரவு/அதிகாலை 2 மணிக்கு ஹிரோஷிமா நகர எல்லைக்குள் வேற்று நாட்டுப் போர் விமானம் ஊடுருவியிருப்பது விமானப்படையின் ரேடார்களில் தெரிய வருகிறது. உடனே ரேடியோ மற்றும் ஒலி பெருக்கிகளின் மூலம் மக்கள் எச்சரிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனைவரும் வீட்டிற்குள் பீதியில் உறைந்து கிடக்கின்றனர். பின்னர் மூன்று மணி நேரங்கள் கழித்து, அவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியபின், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது. சேதம் எதுவுமில்லை என்று சோதித்தறிந்தபின், நகரின் ஒவ்வொரு சாலையாக மக்கள் நடமாட்டத்திற்குத் திறந்து விடப்படுகின்றது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் அந்த நாளைத் தொடங்குகின்றனர். குழந்தைகள் பள்ளி செல்லத் தயாராகின்றனர். பெற்றோர் அவர்களை அனுப்புவதிலும் தாங்கள் வேலைக்குச் செல்வதிலும் முனைகின்றனர்.
காலை 8:15 மணி
மேலும் இரண்டு விமானங்கள் ஹிரோஷிமா நகர எல்லைக்குள் வருகின்றன. முதலில் வந்த விமானம் பூசணிக்காய் போன்ற ஏதோ ஒன்றைப் பாராசூட்டின் மூலம் கீழே போட்டுவிட்டுச் சென்று விடுகிறது. ஆனால் இரண்டாவது விமானம் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. போர்முனையில் இருக்கும் வீரர்கள் சிலர் விமானத்திலிருந்து ஏதோ விழுகிறதே என வேடிக்கை பார்க்கின்றனர்.


ரேடாரில் அதைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் வீரர், தன் மேலதிகாரிக்குத் தகவல் சொல்லத் தன் இருக்கையை விட்டு எழுகிறார். அடுத்த வினாடி என்ன நடக்கிறது என்றே அறியாமல், அவரது உடம்பில் எரிச்சல் ஏற்பட்டு, இரத்தம் வழிகிறது. அங்கிருக்கும் ரேடார் உட்பட அனைத்துக் கருவிகளும் செயலிழந்து உருகி வழிகின்றன. கட்டடம் பற்றி எரிகிறது. நகரெங்கும் ஒரே மரண ஓலம். இத்தனைக்கும் அந்தக் கண்காணிப்பு மையம் அமைந்திருந்த இடம் ஹிரோஷிமாவுக்கு வெளியில் சில மைல்கள் தொலைவில். குண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 28 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கல்லையும் மண்ணையும் தவிர, எரியக்கூடிய பொருட்கள் அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சாம்பலாகி இருந்தன. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு 300000 (மூன்று லட்சம்) டிகிரி செல்சியஸ். அடுத்த ஒரு வினாடியில் 280 மீட்டர் சுற்றளவுக்குப் பரவிய வெப்பத்தின் அளவு 5000 (ஐந்தாயிரம்) டிகிரி செல்சியஸ். எத்தனை மனிதர்கள் இறந்தார்கள் என்பதுகூடத் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துக் காணாமல் போனவர்களைக் கணக்கெடுத்து, அதிலிருந்து இத்தனை பேர் இறந்திருக்கக்கூடும் எனக் கணித்தனர்.


தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு போர்வீரர்

ஹிரோஷிமாவிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் ஒரு ஆரம்பப்பள்ளி இருக்கிறது. காலை 8 மணி முதலே குழந்தைகள் வர ஆரம்பித்திருந்தன. கனேகோ என்ற ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன், எப்பொழுதும் அவனது அக்காவுடன் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அன்று அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவன் தனியாகச் செல்லப் பயந்து அடம் பிடித்துக்கொண்டிருந்தான். அவனது அம்மா, டோக்கியோவிலிருந்து அவனது மாமா அனுப்பிய மூன்று சக்கர சைக்கிள் இன்று மாலை ஹிரோஷிமா வந்து சேர்ந்துவிடும் எனச் சமாதானப்படுத்தி, பள்ளிக்குக் கொண்டு வந்து விட்டார். பள்ளி ஆரம்பிக்கும் முன்னர் அவன் வெளியே ஓடி வந்து விடாமல் இருக்க, அங்கேயே காத்துக் கொண்டிருந்தார். 8:20 மணிக்குப் பள்ளி ஆரம்பிக்கும். மணி 8:10 ஆயிற்று. எல்லாச் சிறுவர்களும் உள்ளே சென்று கொண்டிருக்க, ஒரு சிறுவன் மட்டும் கதவருகில் நின்று அழுது கொண்டிருந்தான். என்னவென்று கேட்கலாம் என அருகில் சென்ற பிறகுதான் தெரிந்தது, அவன் தன் தோழியின் மகன் என்று. அன்று பள்ளியில் விட அவனது அப்பா வராததால் அழுது கொண்டிருந்தான். உடனே அருகிலிருந்த கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கிக் கொடுத்து விட்டு, அதை அவன் ஆசையாகச் சாப்பிடுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென வெப்பநிலை உயர்ந்தது. இந்த அம்மாவுக்கு உடலிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. தம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்று தெளிய முற்படுவதற்குள், தசைகள் பிய்ந்து தொங்க ஆரம்பித்தன. குழந்தைகள் அனைவரும் அலறிக்கொண்டே வெளியே ஓடிவந்தனர். வரும் வழியிலேயே சில குழந்தைகள் கருகி விழுந்தன. எங்கு பார்த்தாலும் 'தண்ணீர்! தண்ணீர்! ஐயோ எரிகிறதே!' என்று ஒரே ஓலம். ஆனால் மகனை இன்னும் காணவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. வெப்பம் தாங்காமல், தான் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவோம் என உணர்ந்து கொண்டார். தானும் தன் மகனும் தன் மகளைப்போல் வீட்டிலேயே இருந்திருக்கலாமோ? வரமாட்டேன் என்று அடம்பிடித்தவனை இழுத்து வந்து இப்படி நெருப்புக்குப் பலிகொடுத்து விட்டேனே என்ற கவலையுடனேயே கண்களை மூடினார்.


பள்ளியிலிருந்து ஓடிவரும் குழந்தைகள்

ஹிரோஷிமா நகரம் V வடிவில் அமைந்த நகரம். நகரை அணைத்துக்கொண்டு இரண்டு ஆறுகள் ஓடி, முனையில் ஒன்றாக இணையும். அணுகுண்டு வெடித்தவுடன் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்க இந்த ஆறுகளுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஆழத்தைப் பற்றிய பயமே இல்லாமல் சரமாரியாகக் குதிக்க ஆரம்பித்தனர். ஆணா, பெண்ணா, உடலில் துணி இருக்கிறதா, இல்லையா, தனக்கு அடியில் இருக்கும் உடலில் உயிர் இருக்கிறதா, இல்லையா, யாருக்கும் எந்த நினைப்பும் இல்லை. வெப்பத்தை எப்படியாவது குறைத்தால் போதும் என்று எண்ணி, தொங்கிக் கொண்டிருக்கும் சதைகளுடன் ஆற்றில் குதித்த பிறகுதான் தெரிந்தது, ஆற்று நீரும் கொதித்துக் கொண்டிருக்கிறது என்று. சில மீட்டர்கள் தொலைவில் ஐந்தாயிரம் டிகிரி வெப்பம் பரவியபோது, நீர் கொதிக்கத் தொடங்கியதில் வியப்பில்லைதானே! இதை வியக்காமல், வலியால் துடித்துக் கொண்டு நீரில் குதித்தவை சதைகளும் ரோமங்களும் எரிந்து போன குதிரைகளும் நாய்களும் கூடத்தான்.


இவையனைத்தும் நடந்து முடிந்தது இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில். இதைவிடக் கொடுமையான விஷயம், அந்த இரண்டாவது விமானத்திலிருந்து, இந்நிலைமைகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. 16 mm பிலிமில் 3 நிமிடம் 50 வினாடி ஓடக்கூடிய அளவுக்கு, தரையிலிருந்து கிளம்பிய புகை விமானத்தை அடையும் வரை ஹிரோஷிமாவைச் சுற்றிலும் படம் பிடித்தனர். அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பதற்கே நமக்கு நெஞ்சு வலிக்கும்போது, படமெடுத்தவனின் இதயம் நிச்சயம் கல்லால் ஆனதாகத்தான் இருக்க வேண்டும். இதைக்கூட, கொடுத்த கடமையைச் செய்யும்போது மற்ற உணர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை என நொண்டிச் சமாதானம் கூறலாம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகும், 3 நாட்கள் கழித்து நாகசாகியின் மீது இன்னொரு அணுகுண்டைப் போட உத்தரவிட்ட அமெரிக்க அரசாங்கத்தை என்னவென்று சொல்வது?
சம்பவம் நடந்து இரண்டு மூன்று மணிநேரம் கழித்து அங்கு வந்த ஒரு பத்திரிக்கை நிருபர் சொல்கிறார். 'எத்தனை முயற்சித்தும் என் கேமிராவைச் சரியாக ஃபோகஸ் செய்யவே முடியவில்லை. கழற்றிப் பார்த்தால், லென்ஸ் வழியாகப் பார்க்கும் கண்ணாடி முழுவதும் என்னையறியாமலேயே, கண்ணீரால் குளிப்பாட்டப்பட்டிருந்தது'. இவர் எடுத்த ஒரு புகைப்படம் இப்பொழுது ஜப்பான் பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்பியலில் ஒரு பாடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பு நிறம் வெப்பத்தை ஈர்க்கும் தன்மையுடையது என்ற கருத்தை விளக்கும் பாடம்தான் அது. இவர் எடுத்த புகைப்படத்தில், கறுப்புக் கட்டங்கள் கொண்ட மஞ்சள் நிறக் 'கிமோனோ' அணிந்த ஒரு பெண்ணின் முதுகில், கறுப்பு நிறக் கட்டங்கள் இருந்த இடங்களில் மட்டும் வெப்பம் ஈர்க்கப்பட்டுக் கட்டம் கட்டமாகக் கருகியிருந்தது.
அனைவரும், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதா, மற்றவர்களைக் காப்பாற்றுவதா எனக்குழம்பி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கையில், அதிக அளவிலான புகை காரணமாக, கருநிற அமிலமழை பொழியத் தொடங்கியது. இறைவன் அருளால் வெப்பத்தைத் தணிக்க மழையாவது பெய்கிறதே என மகிழ்ந்து மழையில் நனைந்தவர்கள் எல்லாம் இறைவனாலும் தாங்கள் கைவிடப்பட்டதை அறிந்து கொள்ளும் முன்னரே செத்து விழுந்தனர். மழைத்துளிகளில் கதிரியக்கத் துகள்கள் இருந்ததுதான் அமிலமழைக்குக் காரணம். இந்த மழைநீர் விழுந்த குளத்திலிருந்த மீன்களும் செத்து மிதந்தன. இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டு வெளியே வரவும் முடியாமல், முழுதாக உயிரும் போகாமல் ஒரு பெண் போராடிக் கொண்டிருந்தார். சில மணிநேரங்கள் கழித்து வந்த மீட்புக்குழுவினர் அப்பெண்ணை இழுத்தபோது மீட்க முடிந்தது அப்பெண்ணின் எலும்புக்கூட்டை மட்டுமே. என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் எனக் கதறிய அப்பெண்ணின் குழந்தை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்கும் முன்பே அப்பெண்ணின் உயிர் பிரிந்தது.

சடாக்கோ (Sadako)

இத்துடன் இதன் விளைவுகள் நின்று விடவில்லை. அணுக்கதிர்வீச்சு பல ஆண்டுகளுக்கும் தொடர்ந்தது. ஜப்பானியப் பெண்கள் தங்களின் நீண்ட கருங்கூந்தலின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். அதைப் பெருமையாக நினைப்பவர்கள். சிறுவயது முதலே மிக்க கவனத்துடன் பராமரிப்பார்கள். அணுகுண்டு வெடித்துச் சில நாட்கள் கழித்த பின்னர், உறவினர்களையும் நண்பர்களையும் இழந்த துக்கம் ஓரளவுக்கு அடங்கிய பின்னர், ஒருநாள் காலையில் பள்ளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த சடாக்கோ என்ற ஆறாம் வகுப்புச் சிறுமி, தலை பின்னிவிட, தன் அம்மா அனைத்து வேலைகளையும் முடித்து வரக் காத்திருந்தாள். முந்தைய நாள் பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதல்பரிசு வாங்கியதையும், இந்த ஆண்டு மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க விருப்பப்படுவதாகவும் உற்சாகமாகக் கூறிக்கொண்டிருந்தாள். அம்மாவும் அதைக் கேட்டுக்கொண்டே வேலைகளை முடித்துவிட்டு, தலை பின்னிவிட வந்து அமர்ந்தார். சீப்பை எடுத்துத் தலையில் வைத்ததும், என்ன செய்வதென்றே புரியவில்லை. அம்மாவின் கண்ணிலிருந்து பொல பொலவெனக் கண்ணீர் கொட்டியது. பேசிக்கொண்டிருந்த அம்மா பாதியில் நிறுத்தியதும் திரும்பிப் பார்த்த சடாக்கோ, தன் தலைமுடி அனைத்தும் தாயின் கையில் இருந்ததைக் கண்டு பதறிப்போனாள். தலையைத் தடவிப் பார்த்தால், ஒரு முடி கூட இல்லாமல், மொட்டையாக இருந்தது. ஐயய்யோ! நேற்றுத்தானே, தன் அழகுக்கூந்தல் தேவதைபோல் ஆடிவர, ஓட்டப்பந்தயத்தில் பெருமையாக ஓடி வந்தோம்! மாவட்ட அளவிலான போட்டியில் மொட்டைத் தலையுடன் ஓடவேண்டுமா? எதிர்கால விளையாட்டு வீராங்கணைக்குத் தலை மொட்டையா? நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. அம்மாவும் என்னவோ ஏதோ என்று பதறியடித்து மருத்துவப் பரிசோதனைக் கூடத்தில் கொடுக்க, சடாக்கோவுக்குப் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறும் அளவுக்கு நல்ல உடல்நிலை கொண்டிருந்தவள், தனக்குப் புற்றுநோய் இருப்பதைக் கேள்விப்பட்டதும், ஒரே இடத்தில் முடங்கிப்போனாள். ஒரே மாதத்தில் துரும்பாக இளைத்தாள். ஒருவேளை புற்றுநோய் இருப்பது தெரிந்திராவிட்டால், உற்சாகத்திலேயே இன்னும் கொஞ்ச நாடகள் சந்தோஷமாக இருந்திருப்பாளோ! கடைசிவரை அவளால் தான் இறக்கப்போகிறோம் என நம்பவே முடியவில்லை. புற்றுநோயின் வலியைவிட, சிறந்த விளையாட்டு வீராங்கணையாக ஆகாமல் இறக்கிறோமே என்ற நினைவே அதிக வலியைத் தந்தது. ஒவ்வொரு நாளும் 'நான் பிழைச்சுக்குவேன்ல! பிழைச்சா, முன்ன மாதிரி நல்லா ஓட முடியும்ல!' என்று மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்த சடாக்கோவின் ஒரே பொழுதுபோக்கு, கலர் காகிதத்தில் கொக்கு உருவம் செய்வது மட்டுமே. மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவள் செய்து முடித்த கொக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். இவை அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் சடாக்கோவின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும், ஆகஸ்டு 6ம் தேதி, அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான கொக்கு உருவங்கள் இவளது நினைவிடத்துக்கு மாணவர்களால் அனுப்பப்படுகிறது.
அணுக்கதிர் வீச்சு உடலுக்கு எப்படித் தீங்கு விளைவிக்கிறது என்பதை இரண்டு நிமிடக் குறும்படமாகக் காட்டுகிறார்கள். அதைக் கீழே உள்ள படத்தில் காட்ட முயற்சித்திருக்கிறேன்.


இப்படி நன்றாக இருந்த குரோமோசோம்கள் (நீலநிற) அணுக்கதிரினால் வெட்டப்பட்டு,


இப்படி இடம் மாறி, உடல் உறுப்புகளில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. அல்லது வேறொரு குரோமோசோமுடன் ஒட்டாமல் அழிந்து போய் இறந்த செல்களாகி, நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது.
1977 லேயே கதிர்வீச்சு நின்று விட்டாலும், ஹிரோஷிமாவில் வசிக்க மக்கள் அச்சப்பட்டனர். இதைமாற்ற, அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது. முதலிலிருந்து அந்நகரைப் புதிதாக நிர்மாணித்து, பள்ளிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் சீர்படுத்தப்பட்டன. மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கப் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தது.
>அணுகுண்டு வெடித்த இடத்தில், ஒரு புல், பூண்டு கூட முளைக்காது.
>இனிமேல் மனிதர்கள் வாழவே முடியாது.
>அணுக்கதிர்வீச்சு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
>ஹிரோஷிமாவில் இருக்கும் பெண்கள் அனைவரும் கருத்தரித்தவுடன் வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்.
என்றெல்லாம் இதுவரை பலர் கூறக்கேட்டு நம்பியிருக்கிறேன். ஆனால், இவையத்தனையும் ஆதாரமற்றவை என்று ஹிரோஷிமா சென்றதும் தெரிந்து கொண்டேன். அணுகுண்டு வெடித்த இடத்தில் ஒரு பெரிய பூங்காவே அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்த பிறகுதான், மக்கள் மனதில் நம்பிக்கை பிறந்து, குடியேற ஆரம்பித்தனர். டோக்கியோ, ஓஸகா போன்ற நகரங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் வளர்ந்து நிற்கிறது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு கலந்து கொள்ளும் அனைவரும், அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.


1984 ஆம் ஆண்டு நம் அன்னை தெரசா அமைதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்
இந்த அருங்காட்சியகத்தைப் பார்த்து முடித்தபின், 'உங்கள் நாடு அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அணு விஞ்ஞானிதான் ஜனாதிபதியாகவும் இருக்கிறார். எனவே, மறந்தும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலிருக்க அரசாங்கத்துக்குக் குரல் கொடுங்கள். குறைந்த பட்சம் கடிதம் மூலமாகவாவது உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்.' எனக் கேட்டுக்கொண்டனர். நான், 'எங்கள் நாடு முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாது' என்ற இந்திய அரசின் கொள்கையைக் கூறினேன். 'மற்ற நாடுகள் பொறுப்பில்லாமல் பயன்படுத்தினால், நீங்களும் அதே பொறுப்பற்றத்தனத்துடன், தெரிந்தே பல லட்சம் அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டுமா? அதனால் இறந்து போன உங்கள் நாட்டு மக்கள் உயிர்த்தெழுந்து விடுவார்களா?' என்றனர். நானும் விடாமல், 'வல்லரசு நாடாக மாறுவதற்கு அணுசக்தியும் ஒரு காரணியாகக் கருதப்படுகிறதே?' என்றேன். 'பொருளாதாரத்திலும் அடிப்படைத் தேவைகளிலும் தன்னிறைவு அடையாமல், வல்லரசு என்று கூறிக்கொள்வதில் என்ன பயன்? அணு ஆயுதங்களும் இரசாயன ஆயுதங்களும் உலகிலிருந்து முற்றிலுமாக ஒழியும் வரை மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று சொல்வது நிச்சயமில்லை' என்று சொல்லி வழியனுப்புகிறார்கள்.


அணுகுண்டு போடுவதற்கு முந்தைய ஹிரோஷிமாஅணுகுண்டு போட்டபின் அழிந்துபோன ஹிரோஷிமா

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இன்றைய ஹிரோஷிமா

வரலாறு படிப்பதன் நோக்கமே, கால ஓட்டத்தில் நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொண்டு, மீண்டும் அதைத் தொடராமல் இருப்பதற்காகத்தான். ஒரு சில தவறுகளைக் காலங்கடந்த பின்னர் திருத்திக் கொள்ளவே முடியாது. ஆனால், அதன் பின்விளைவுகளை நல்ல விதமாக அமையச்செய்ய நம்மால் முடியும். ஒரு கெட்ட செய்கையினால் ஒரு நகரமே அழிக்கப்பட்டால் என்ன? அதைப் புதிதாக நிர்மாணிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருந்தால் என்ன? மேலும் இது போன்றதொரு சம்பவம் நடக்காமல் கவனமாக இருப்பதற்கு விடப்பட்ட எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் ஹிரோஷிமா வரலாறு நமக்குக் கற்றுத்தரும் பாடம். வரலாற்றின் வழிகாட்டலில் வாழ்ந்து, வாழ்க்கையை வளமாக்குவோமாக!

நன்றி (ச. கமலக்கண்ணன்) வரலாறு (http://www.varalaaru.com/

Tuesday, March 10, 2009

உயிராயுதங்களாய் கரைந்த உயிர் நண்பர்கள்

மகனைப்பார்த்து எவ்வளவு காலம் இருக்கும் இப்ப எப்படி இருப்பானோ? அம்மாவுக்கு ஏக்கம்.மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்தொடங்கிய போது "புலிக்கு..." என்று புறப்பட்டு போனவந்தான்.அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை.

இடையில் ஒரு நாள்.....

சண்டை ஒன்றில் மைன்ஸ் வெடித்து பிள்ளைக்கு கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவின் காதுக்கு எட்டியது.

அம்மாவின் கண்களில் அருவி. வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ? .. அம்மா என்று அழுவானோ?..

அவள் மகனையே நினைத்துக்கொண்டு இருப்பாள். கொஞ்சநாட்களாக அம்மாவின் இரவுகள் தூக்கமற்று நீண்டு கழிந்தன.

காலம் அசைந்தது....

பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம்.... கடற்புலியாக கிளாலியில நிக்கிறாணாம்...

சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களை காப்பாத்துகிற வேலையாம்....

அவர்கள் அறிந்தார்கள்.

எவ்வளவு காலமாகி விட்டது...? எப்படி இருக்கிறானோ ? மகனைப்பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும் ஆவலும் அவளை அவசரப்படுத்தியது.

சோதனைச் சாவடிகள்.இராணுவக் கெடுபிடிகள். கொச்சைத்தமிழில் துளைத்தெடுக்கும் கேள்விகள்.கிரானில் துவங்கி தாண்டிகுளத்தில் முடிந்த துயரப்பயணத்தின் இறுதியில் அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.

மட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரை பதிந்து, பிள்ளைக்கு தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது. ஆனால் மகன் வரவில்லை.

கிளாலியில நெவிக்கு கரும்புலி தாக்குதல் நடந்ததாம்... கனக்க நெவியும் முடிஞ்சுதாம்... என்று ஒரு செய்தி மட்டும் வந்தது.

எல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும் தான்.

மாலையானதும் பரபரப்பாக பேசப்பட்ட அந்தச் செய்தியை தாங்கி "ஈழநாதம்" விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்க்கு வந்தபோது......

அந்தப்படங்கள் .......அந்தப்படம்.....!


அம்மா உற்று உற்றுப் பார்த்தாள். கண்கள் இருண்டன.உடல் விறைத்துப் போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை வரதன்.......?

அவன் தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம் அது அம்மாவின் பிள்ளையே தான். அள்ளி அணைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாளே..... அதே பிள்ளைதான்.

கறியில்லாமல் , காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில், "சோறுகாச்சணை கறியோட வாறன் " என்று துவக்கெடுத்துக்கொண்டு காட்டுக்கு போவானே... அதே மகன்!

வீதியில சிங்களப்படை மறித்து, கிறனைட்டை கையில் கொடுத்து "வாயுக்குள்ள போடடா..." என்ற போது , "விருப்பமென்றால் உன்ர வாயுக்குள்ள போடு..." என்று துணிவோடு திருப்பிக்கொடுத்துவிட்டு வந்தானே... அந்த மகன்.

சோகத்தோடு அணைத்து நிற்க்கும் தலைவனுக்கு அருகில் பூரிப்போடு சிரித்துனின்றான். அந்த கரும்புலி.

தாங்க முடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த அம்மா அழுதாள்.கவலையை தீர்க்க கண்ணீர் தீரும் வரை அழுதாள்.


கந்தசாமி அய்யாவிற்கும் அம்மாவிற்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்குள் நான்காவது வரதன். இராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.

1973 ம் ஆண்டிற்கு பிறகு ,ஒவ்வொரு வருடமும் , தமிழ் புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாக வரதனின் பிறந்தநாள் வந்து போகும்.

கல்வியிலும் , விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவனாக பள்ளிக்கு போனவனை, அப்பாவோடு வயலுக்கு போகவைத்தது குடும்பநிலை.

குடும்பத்துச் சுமை பகிர்ந்து உழைத்து , 16 வயதுவரை வீட்டோடு இருந்தவனை இயக்கத்துக்கு போக வைத்தது நாட்டு நிலை.

மன்னம்பிட்டிக்கு கிழக்கே 15 மைல் தூரத்திலுள்ள கள்ளிச்சை வடமுனைதான் ஊர். ஆக்கிரமிப்பின் கொடிய வலியை அனுபவிக்கும் தாயகத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்று.

மட்டக்களப்பில் பயிற்சியை முடித்தவனுக்கு அங்கு கண்ணிவெடிப்பிரிவில் பணி.

சிங்களப்படையுடன் மீண்டும் போர் தொடங்கி- வெடி ஓசைகளால் நிறைந்து , நகர்ந்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று, கள்ளிச்சை - வடமுனைக்கும் பெண்டுகல் சேனைக்கும் இடையில் எதிரி விதைத்து விட்டு போயிருந்த மிதிவெடிகளில் ஒன்று விநியோக வேலைகளில் ஈடுபட்டிருந்த வரதனின் வலதுகாலைப் பிய்த்தது.

காட்டு முட்கள் கீறிக்கிளிக்க நரகவேதனையிற்கு நடுவில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான் வரதன்.சிகிச்சை முடிய புகைப்படப்பிரிவில் பணி.

கிளாலியில் இருந்த கடற்புலிகலின் தளம்.

எங்கள் அன்புக்கினிய மக்களை ,இரத்தப்பசி கொண்டலையும், இனவாத பேய்களிடம் இருந்து காத்து நிற்க்கும் உன்னத பணியில் அவர்கள். இரவில் விழித்திருந்து அலைமடியில் காவல்.பகலை இரவாக்கி தூங்கமுயலும் வாழ்வு.

முகாமில் எப்பொழுதும் கலகலபை நிறைத்திருப்பவன் மதன் தான்.துடி துடிப்பான சுபாவம் அவனுடையது.வரதனும் மதனும் உற்ற நண்பர்கள்.புகைப்படப்பிரிவில் ஒன்றாக வேலை செய்தபோது மெல்ல அரும்பிய உறவுதான் - இன்று உயிருக்கு உயிரான சிநேகிதமாக இறுக்கம் பெற்றிருந்தது.


ஒன்றாக தலைவருக்கு கடிதம் எழுதி, ஒன்றாக கடற்புலிகளுக்கு வந்து ,ஒன்றரை கால்கலோடு நீந்தப் பழகி, பயிற்சி பெற்று, படகேறி , கடலில் களமாடி ,ஒன்றாக கிளாலியிலும் பணி செய்தவர்கள், ஒன்றாக கரும்புலிக்கும் பெயர் கொடுத்தவர்கள். இறுதியிலும் ஒன்றாகவே போனார்கள்.

மதன் துடி துடிப்பானவன். ஒற்றைக்காலில் கூத்தாடி... ஊன்று தடியோடு துள்ளியோடி... கும்மாளம் அடித்தபடி திரிந்து.. அவன் ஓய்ந்ததே இல்லை.

திருமலை காட்டில் மிதிவெடி ஒன்று கழட்டிவிட்ட இடதுகாலுக்கு பதிலாக ஜெய்ப்பூர் கால் கொளுவப்பட்டிருந்தது.பொய் காலை கழட்டிவிட்டு ஒன்றரை காலில் மரத்தில்லேறி மாங்காயும் ,இளநீரும் பிடுங்கித்தந்து, எங்களோடு சேர்ந்திருந்து சாப்பிட்டு மகிழ்ந்த உன்னத நண்பன் அவன்.

இரவெல்லாம் படகோடி, கடலில் சமராடிவிட்டு, பகலில் தூங்க முயலும் தோழர்களை ஊன்றுதடியால் தட்டிக் குழப்பித்தொந்தரவு செய்துவிட்டு.துள்ளி ஓடி அவர்களின் அன்பான சினப்பிற்க்கும் அளாகின்றவன் அந்த குழப்படிகாரன்.அவன் கூட தானும் இரவு சண்டைக்கு போயிருப்பான் அனாலும் பகலிலும் ஓடித்திரிவான்.

சண்டைக்கு தயாரான ஓடுபாடுகள் இல்லாத ஓய்வான ஒரு மாலைப்பொழுதில் - மதன் ஒரு தென்னை மர அடியில் சாய்ந்திருப்பான்.கடற்காறோடு கலந்து ஒரு பாடல் விரியும்.தன்னுடையது பாடுவதற்கேற்ற ஒரு குரல் இல்லையென்பது தெரிந்திருந்தும் அவன் பாடுவான். அதில் ஒரு கவர்ச்சி இருக்கும்...அருகில் இருப்பவர்களை ஈர்க்கும்.

எப்போதும் எதிலும் கவனமில்லாத ஒருவனைப்போல் பகிடி சோல்லித்திரிகின்ற மதன், தனது திறமையை வேலைகளின் போது செயலில் காட்டுவான்.எங்களால் செய்யமுடியாமல் போகிற சில சில வேலைகளை, ஒரு காலை இழந்தவனாய் இருந்தும் அவன் செய்துமுடிப்பான்.பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருக்கிற மதன் , சக தோழர்கள் தவறு செய்யும் போது சொல்லித் திருத்துகின்ற போராளி.

மதனுகிருந்த இயழ்பான குழப்படித்தனத்தால், வரதனோடு தோடங்கிய ஒரு பகிடிச்சண்டை சீரியஸாக முடிந்தது.அந்த உயிர் நண்பர்கள் கதைக்காமல் பிரிந்து போய்விட்டார்கள்.

அடுத்த 24 மணி நேரம் வெறுப்பூட்டுவதாக கழிந்தது.

வரதன் குளிக்கப்போனான்.எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்.இப்போது வரதன் தனியே.முகத்தைதொங்கப் போட்டுக்கொண்டு மதன் ஒரு மரக்குத்தியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான்."போ" என்று நட்புத் தூண்டவும் தன்மானம் தடுத்தது.அனாலும் அன்பே வென்றது. ஊன்றுதடியுடன் துள்ளிக்கொண்டு முந்தி ஓடிப்போய் வாளியை எடுத்து வரதனுக்கு குளிக்கவார்க்கத்தொடங்கினான்.சேரனிடம் இதைசொல்லும் போது வரதனின் கண்கள் பனித்திருந்தன.

வரதன் அமைதியானவன்.அதிகம் பேசத் தெரியாதவன்.கதைகளை விட செயல்களிலேயே அதிக ஈடுப்பாடும் நம்பிக்கையும் கொண்டவன்."கதைக்கும் போதெல்லாம் இயக்கத்திற்க்கு எதாவது பயன்படக்கூடியதாய் கதையுங்கோடா.." என்று எங்களுக்கு புத்தி சொல்பவன்.அது வெளியில் தெரியாமல் தனக்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலை.

அம்மா அப்பாவை பிரிந்து, உறவுகளை பிரிந்து நீண்ட காலம் எங்கு இருக்கின்றார்களோ...? ஆமிப்பிரச்சனைகளால் ஓடுப்பட்டுத் திரிகின்றார்களோ...? வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்பம் என்ற ஆவல் வரதனுக்கு எழுந்தது.

வரதன் கடிதம் எழுதினான்.பதிலுக்காகக் காத்திருந்தான். அடுத்த தரம் எழுதினான்; காத்திருந்தான். பதிலில்லை ,மூன்றாம்தரம் - பதிலில்லை.நான்காவது கடிதமும் போனது; பதில் வரவே இல்லை.

இடம்பெயர்ந்து வந்து கிளாலியில் இறங்கிய உறவினர்கள் சிலரை எதிர்பாராமல் வரதன் சந்திக்க நேர்ந்தது. "ஒரு இரவு ஊருக்குள்ள ஆமி புகுந்து வெட்டியும், சுட்டும் நூற்றுக் கணக்கில் சனங்களை கொண்டவங்கள் தம்பி.

...தப்பி ஓடிவந்த எங்களுக்குள்ள உன்ரை வீட்டுக்காரர் வரேல்லை.... என்ன நடந்ததோ....? கடவுளுக்குத்தான் தெரியும் !" வானத்தைப் பார்த்து கைகளை விரித்துச் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவர்கள் போய்விட்டார்கள்.

காதுகளில் இடியென இறங்கிய செய்தியால் அவன் துடித்துப்போனான். ஏற்கெனவே அவனுக்குள் வீசிக்கொண்டெழுந்தது. ஆனாலும் அது ஒரு வதந்தி மட்டுமே என்பது கடைசிவரை அவனுக்குத் தெரியாமலே போய்விட்டது.

கிளாலியின் விரிந்த கடல்.

தமிழர்களின் இரத்தமே அலைகளாய் அசையும் 20 மைல் நீளச் செந்நீர்ப்பரப்பு.

இரத்தப்பசிகொண்டு அலையும் சிங்களப் படை. உயிர் விழுங்கும் துப்பாக்கி வாய்களோடு காத்து நிற்க்கும் மரணவலயம். அந்த மரண வலயத்திலும் - கடலரண்களாய் கடற்புலிகள் காவல் நிற்க, எங்கள் மக்கள் துணிவுடன் பயணிக்கும் குடாநாட்டுக்கான தனியொரு பாதை.

நாகதேவன் துறையில் பொருத்தப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த ராடர்களின் திரையில் புள்ளிகளாய் அசையும் எங்கள் படகுகளை, துல்லியமாக இனம் கண்டு தாக்கி மூழ்கடிக்க விரைந்துவரும் எதிரிப் படகுகளை, உள்ளங்கையைக் கூட பார்க்க முடியாத கும்மிருட்டிலும் கூட, கண்களை மட்டுமே நம்பி எதிர்கொண்டு விரட்டியடிக்கும் சாதனைக் களம்.

எதிரி தடை செய்த வலயத்தை எதிரிக்குத் தடை செய்து வீர சாதனை படைக்கும் கடற்புலிகளின் போர்திறனையும், அதனை பிரமாண்டமான ஒரு வளர்ச்சி நிலையை நோக்கி உயர்த்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் முயற்சியையும், ஆற்றலையும் உலக அரங்கில் பறைசாற்றிக்கொண்டிருந்த போர்முனை.

கிளாலிக் கடலில் மக்கள் போக்குவரத்துச் செய்ய்த்துவங்கிய நாளிலிருந்து அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் கடற்புலிகளின் அணி, வரதனையும் மதனையும் கொண்டிருந்து.

அந்த கடற்களத்தில் புலிகள் எதிரியைச் சந்தித்த ஒவ்வொரு சண்டையிலும், இவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.

விடிகாலைகளில் , பயணம்போன எம்மக்கள் செத்தபிணங்களாய்க் கரையொதுங்கிய போதெல்லாம், அவர்களுக்குள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரியும்.

அவர்கள்,துணிகரமான சண்டைக்காரர்கள். அவர்களுடைய வண்டிகளில், எதிரியின் படகுகளை மூக்குக்கு நேரே எதிர்கொண்டு அவனை திகைப்பிலாழ்த்துவார்கள். கண்ணைக்கட்டி இருளில் விட்டது போன்ற இருட்டிலும் எதிரியின் படகுகளை இனம் கண்டு நல்ல வியூகங்களில் தளம்பலின்றி வண்டியைச் செலுத்தி- அவனைத் தாக்கி திணறடிப்பார்கள். அந்த மயிர்க்கூச்செறியும் கணங்களில் எதிரி தலை தெறிக்க ஓட்டமெடுப்பான். அந்த நேரங்களில் அவர்கள் சொல்வார்கள்: "இப்ப மட்டும் ஒரு சக்கை வண்டி இருக்குமெண்டால், இவங்களின்ரை கதை இதிலையே முடியும்"

அவர்கள் ஒரு கரும்புலித் தாக்குதலுக்காக காத்திருந்தார்கள்."எங்களின் மக்களைக் கொன்றொழித்தவர்களை இதே கடலில் வைத்துக் கொன்றொழிக்க வெண்டும்.என்ற வீர சபதம்.அவர்களின் இதயங்களில் முழங்கிகொண்டிருந்தது. கரும்புலித் தாக்குதலை நடாத்தும் இரவ, அவர்கள் எதிர்பார்த்திருந்தர்கள்.

"ஏன் கரும்புலியாகப் போகின்றீர்கள்?" என்பதற்கு , ஒரு தத்துவார்த்த விளக்கத்தை அளிக்கக்கூடிய அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லையாயினும், அதன் தேவையை - அதன் முக்கியத்துவத்தை - அதன் பலத்தை - உளப்பூர்வமாகவும் தெளிவாகவும் உணர்ந்துகொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

வரதன் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பான். அருகில் போகிற நண்பனிடம் "தலைவர் சொன்னதையே நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன்.எனது சிந்தனையெல்லாம் அதிலையே இருக்கு.அந்த ஒரு நொடிப்பொழுதுக்காக நான் எவ்வளவு காலமும் காத்துக் கொண்டிருப்பன். என்றொ ஒரு நாள் கிளாலிக் கடலில் ஒரு 'வோட்டர் ஜெட் ' நொருங்கும் " என்பான்.


மதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். சீனிவாசன் சிவகுமார் என்பது அவனுடைய இயற்பெயர்.1975 ஆம் ஆண்டு , செப்ரெம்பர் திங்கள் 7ம் நாள், அந்த வீர மைந்தனைப் பெற்றாள் ஒரு வீரத்தாய்.

குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்கும், ஒரு தங்கைக்கும் இடையில் அவன், மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது 1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள், பள்ளிக்கூடத்திற்கென்று புறப்பட்டுப்போனவன் திரும்பிவரவில்லை."இயக்கத்துக்குதான் போயிருப்பான்..."

என்ற வீட்டிலுள்ளவர்களின் ஊகிப்பும் பிழைத்துவிடவில்லை.

கிளாலியின் கடற்போர் முனை. எறக்குறைய 60 நாட்கள் அலைகள் போல அசைந்து கடந்துவிட்டன.

அந்த உயரிய சாதனையை நிகழ்த்த அவர்கள் கடலுக்கு போய்ப்போய்த் திரும்பி வரவேண்டியிருந்தது. நாட்செல்ல செல்ல அவர்களுடைய உறுதி இறுகிக்கொண்டே போனதேயன்றி, இளகியதில்லை.

ஒவ்வொரு தடவையும் சண்டை துவங்கும். துப்பாக்கிக் குழாய்கள் சிவக்க எங்களது படகுகள் பகைவனை எதிர்கொள்ளும். 'சக்கை' வண்டி அவனை மின்னலென நெருங்கும்.எதிரி ஓட்டம்மெடுப்பான்.சக்கை வண்டி கலைக்க இடைவெளி குறுகும்.எதிரியின் வேகம் கூடும்.அதிகரித்த வேகத்தோடு சக்கை வண்டி அண்மிக்க, ஒரு அடி உயர நீரில் ஓடக்கூடிய தன் நவீன படகை எதிரி ஆழம் குறைந்த நீர்ப்பரப்பின்னூடு செலுத்துவான்.சக்கை படகுகள் தரை தட்டும். தொடர்ந்து கலைக்க முடியாமல் திரும்ப வேண்டியிருக்கும். மறுநாள்......

முகாமின் ஒரு மூலையில் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு இருப்பார்கள்.இரவு தங்களால் இடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக, அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.

61 நாட்களும் இப்படித்தான் நகர்ந்தது.

25.08.19993

வழமையான இரவு.

நிலவு உலா வராத இருண்ட வானம்... சிலிர்ப்பூட்டும் குளிர்....

உடலுக்கு அசதியைத் தந்தாலும், உள்ளத்திற்க்கு உற்சாக்மூட்டும் உவர்காற்று... கடற்புலிகள் காவல் உலா வர மக்களின் பயணம் துவங்கியது.சக்கை நிரப்பிய "புலேந்திரன்" "குமரப்பா" வில் மதனும் வரனும் தயாராக நின்றார்கள்.

கடந்துபோனவைகளைப் போல அல்லாமல் இந்த இரவில், அவர்களின் முகங்களில் நம்பிக்கையின் தெறிப்பு, இனம்புரியாத பூரிப்பு.அருகில் நின்ற கண்ணாளனிடம் குப்பியைக் கழற்றிக்கொடுத்து விட்டு மதன் சொன்னான் "இண்டைக்கு இடிச்சே தீருவன்.திரும்பி வரமாட்டன்."

நேரம் நடு இரவைத் தாண்டியிருந்தது.நாகதேவன் துறைத்தளத்திலிருந்து அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறினான். எதிரி. இன்று அவனுடைய தாக்குதல் வடிவம் வித்தியாசமானதாக இருந்தது.

ஒவ்வொரு தடவையும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும் இன்று அவன் அமைத்து வந்த வியூகம் புதுவிதமானது. இரண்டு அணிகள். ஒன்று ஒரு புறத்தில் புலிகளைத் தடுக்க , மற்றையது மறு புறத்தில் மக்களைத் தாக்கும்.

ஆனால், பகைவன் சற்றும் எதிர் பாராதவிதமாக அவனை இருமுனைகளில் எதிர்கொண்டனர் கடற்புலிகள். துப்பாக்கி முனைகள் தீ உமிழ, வானம் விழாக்கோலமானது.

சண்டை உக்கிரமடைந்ததுகொண்டிருந்த ஒரு கட்டத்தில், காத்திருந்த 'புலேந்திரன்' படகை 'வோக்கி' அழைத்தது. மதன் ஆவலோடு பதில் கொடுத்து , கட்டளைக்கு காதுகொடுத்தான்.

மக்களைத் தாக்கவந்த எதிரி, புலிகளிடம் சிக்கிப்போயுள்ள முதலாவது சண்டை முனையில் ஏற்ககெனவே விளங்கப்படுத்தப்பட்டிருந்த தாக்குதல் திட்டத்தின்படி - 'வோட்டர் ஜெற்' படகொன்றைத் தாக்குமாறு வோக்கி கூறியது.

சுற்றியிருந்த தோழர்கள் கண் கலங்க, சிரித்த முகத்தோடு மதன் புறப்பட்டான். மின்னல் கீற்றென நெருங்கிய கரும்புலிப் படகைக் கண்டு எதிரி தப்பி ஓட முயல, அதற்கு அவகாசமில்லாமல் , மதன் அதன் மையப்பகுதியோடு மோதினான். பிரகாசித்தெழுந்த ஒளி வெள்ளம் மறைந்து , இருளோடு இருளாகக் கரும்புகை கரைந்தது கொண்டிருக்கும்போது, இரண்டாகப் பிளந்து மூழ்கிக்கொண்டிருந்த 'P115' இலக்க 'வோட்டர் ஜெற்' றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தான் நேசித்த கடலோடும்..... காற்றோடும்..... எங்கள் மதனும்..... அவனது 'புலேந்திரனும்'.

அந்த கடற்களம் நீண்டுகொண்டிருந்தது. கடற்புலிகள் கடலில் சந்தித்த முதலாவது பெருஞ் சமர் அதுவாகத்தான் இருக்கமுடியும்.புலிகளைத் தாக்க வந்த அணியை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த இரண்டாவது முனையிலிருந்து, 'குமரப்பா' படகிற்க்கு அழைப்பு வந்தது. காத்துக்கொண்டிருந்த வரதன், களத்திற்க்கு விரைந்தான்.

புலிகளின் சண்டைப்படகுகளால் வளைக்கப்பட்ட நிலையில் ,தப்ப வழியின்றி தளத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு உதவி வரும் வரை சண்டையிடத் தீர்மானித்து விட்ட ஒரு 'வோட்டர் ஜெற்' படகு , வரதனின் இலக்கு. 'வோக்கி' அவனுக்கு தாக்குதல் வழிமுறையை வழங்கியது.உதவி கிடைக்குமுன் அதனை உடைக்க வேண்டும்.இருள் ஆளை ஆள் பார்க்க முடியாத இருள், வளைத்து நிற்க்கும் புலிகளின் படகுகளை அவதானித்து - விலத்தி ஓடி , 'வோட்டர் ஜெற்' றை சரியாக இனம் கண்டு - அது அவனுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தி இடிக்க வேண்டும். தவறுதலாக எங்களுக்குள் முட்டுப்பட்டாலோ விளைவு விபரீதமானதாக மாறிவிடும்.

சரியான இலக்கை நோக்கி, வரதன் நெருங்கினாந் அதிகரித்த வேகத்தோடு. திகைத்த எதிரி எதுவுமே செய்யமுடியாமல் மலைத்துப்போய் நிற்க , அடுத்த கணப்பொழுதில்...! அந்தக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்...!

எதிரியின் படகு.... எங்கள் அன்பு வரதனும் 'குமரப்பா' வும் தான்......

நாகதேவன் துறையிலிருந்த கடற்படைத் தளத்தில் தகவல் தொடர்பு சாதனம், 'P121' என்ற தங்கள் போர்படகை அழைத்துக்கொண்டிருக்க, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப்படகிலிருந்து, கடற்புலி வீரர்கள் ஆயுதங்களை எடுத்துமுடித்துவிட்டார்கள்.

ஒரே பாயில் படுத்து, ஒரே கோப்பையில் சாப்பிட்டு, அளுக்காள் தண்ணி ஊற்றி- ஊத்தை தேய்த்து ஒன்றாகவே குளித்து, ஒரே இலட்சியத்திற்காக வாழ்ந்த அந்த உயிர் நண்பர்கள் - கிளாலிக்கடலில் நடந்த ஒவ்வொரு சண்டையின்போதும், ஒன்றாகவே நின்று, சிங்கள பிணந்தின்னிகளை நெருப்பெனச் சுட்டெரித்தவர்கள் சாகும்போது கூட ஒன்றாகவே போனார்கள்.

எங்களுக்காக...... மக்களுக்காக......

Friday, January 9, 2009

சோமாலியா என்னதான் நடக்கிறது?

வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன?

உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.
ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா ஆகிய வற்றை மறு எல்லைகளாகவும் கொண்டு விளங்குகின்றது.

1960 இல் இதன் ஒருபகுதி இத்தாலி தேசத்திடம் இருந்து பிரிந்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த மறு பகுதி தேசத்துடன் சேர்ந்து கொண்டது. அதன் பின் 26 ஜூன் 1960 இல் முழுமையான் சுதந்திரம் அடைந்து சோமாலிய சோசலிச குடியரசானது.

எனினும் 1969 இல் நடந்த இராணுவ புரட்சி மூலம் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜெனரல் ஷெர்மார்க் அதிபரானார். இதன் மூலம் சோமாலியா புரட்சிகர இராணுவம் உருவாக்ககம் பெற்று அவர்களின் சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை பொருளாதார வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்தக்களவு வெற்றியும் கண்டனர்.

இவ்வேளையில் தான் சோமாலியாவின் தலைவிதி மாறத்தொடங்கியது தனக்கு தானே மண் அள்ளிபோட்டது போல் வல்லரசு போட்டிக்கு தன்னை பலிக்கடா ஆகியது சோமாலியா.

குடியேற்ற காலத்தின் போது சோமாலியாவில் இருந்து பிரிக்கப்பட்டு எதியோப்பாவுடன் இணைக்கப்பட்ட தனது பிரதேசமான ஓக்டெனை மீண்டும் சோமாலியாவோடு இணைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் சோமாலியாவினால் எதியோபியாவுக்கு விடுக்கப்பட்டது. எதியோப்பா , கென்யா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய எதியோப்பியா மீது போர் தொடுத்தது சோமாலியா.

1977 இல் ஆரம்பமான இப்போரை பயன்படுத்தி அன்றைய வல்லரசுகள் (அமெரிக்கா ,சோவியத் யூனியன் -ரஷ்யா ) குளிர்காய சோமாலியாவை தளமாக பயன்படுத்ததொடங்கினர். உலக நாடுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக போரில் குதித்ததாக சோமலியாவை உலக நாடுகள பலவும் பகைத்துக்கொள்ள எதியோப்பியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் , சோமாலியாவிற்க்கு ஆதரவாக அமெரிக்காவும் செயற்ப்பட இரு வல்லரசுகளின் பனிப்போர் போட்டிக்கு இரையானது எதியோப்பியாவும் சோமாலியாவும்.தொடர்ச்சியான போர் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்க, இராணுவ ஆயுதங்கள் மிக எளிதாக கிடைக்க ஆயுதக்குழுக்கள் பலவும் வகை தொகையின்றி உருவாகின. பனிப்போரின் (அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையான போட்டி ) முடிவு வரை சோமாலியாவில் அரசியல் நிர்வாகம் இயங்காமலே கிடந்தது அல்லது அமெரிக்கா அதனை இயங்காமல் செய்தது என்பதே உண்மை. அமெரிக்கவால் ஒரு பொம்மை அரசு உருவாகினாலும் அதனால் ஆயுதகுழுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை . ஆயுதகுழுக்கள் உணவுக்காக , நீருக்காக என அடிப்படை தேவைகளுக்குக்காக தம்மிடையே சண்டை போடவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களும் , ஒவ்வோரு குறிச்சிகளும் என இந்த ஆயுத குழுக்கள் தம் வசப்படுத்திக் கொண்டு சிற்றரசர்கள் ஆகினர் ஆயுத குழு தலைவர்கள்.
பசி , பட்டினி என இலட்சகணக்கானவர் மாண்டுபோயினர்.

அனாலும் சோமாலிலாந்து எனும் ஒரு மாகாணம் மட்டும் தன்னை சோமாலியாவில் இருந்து விடுவித்து கொண்டு தன்னை ஒரு சுதந்திர தேசமாக அறிவித்தது. சோமலியா அதனை ஏற்றுக்கொள்ளாத போதும் சோமாலிலாந்து அதிகார பூர்வமன ஒரு அரசகவே உலக நாடுகள் சில நோக்குகின்றன. சில நாடுகள் சோமாலிலாந்தில் தனது அதிகாரபூர்வ தூதுவராலயங்களையும் கொண்டும் உள்ளன. அனாலும் ஐக்கிய நாடுகள் சபையினால் தனி நாட்டிற்கான அங்கீகாரம் இன்றுவரை கிடைக்கவில்லை.

உலகின் கண்களுக்கு இடியப்ப சிக்கலான பிரச்சனைகளை கொண்ட நாடாக மாற்றிய உலக நாடுகள் ஏன் இன்றுவரை சோமாலியாமீது கரிசனை காட்டாது உள்ளன ?

இதன் பின்ண்ணியில் உலக நாடுகளின் நயவஞ்சகம் எப்படி உள்ளது.

இவற்றிக்கு இப்பொழுது நாம் விடை தேடுவோம் ........

ஆம் இதன் அமைவிடத்தை நன்றாகவே பயன்படுத்திய உலக வல்லரசுகள் தமது இரசாயன (யுரேனிய )கழிவுகளை கொட்டும் இடமாக சோமாலியாவை பயன்படுத்தி கொண்டன என்பதே உறைக்கும் உண்மை.

பெரிய கடல் வளத்தை கொண்டிருந்த போதும் அவர்கள் அதன் பலாபலன்களை பெறமுடியாது போய்விட்டனர் சோமாலியர்.

கடற்கரைகளில் தினமும் ஒதுங்கும் இரசாயன கழிவுகளால் கடல் வாழ் உயிரிணங்கள் மட்டுமல்ல சோமாலியா மக்களே வகை தொகையின்றி செத்துக்கொண்டு இருக்கிறனர். உலக நாடுகளுக்கு சோமாலியாவின் கடலில் தமது கழிவுப்பொருட்டகளை கொட்டுவது மிகவும் இலாபகரமாக இருப்பதோடு சோமாலியாவில் ஒரு உறுதியான அரசு இல்லாமை இவர்களுக்கு இன்னும் வாய்ப்பாகிப்போனது.

ஒருபக்கத்தில் ஆயுத கலாச்சாரத்தை ஊக்கிவித்தபடி மறுபக்கத்தில் தமது சுய தேவகளை குறுக்குவழியில் அடையும் இன்நாடுகள் சோமாலியர்களை ஒரு மனித இனமாக மதிப்பதாகவே தெரியவில்லை.ஐக்கிய நாடுகள் சபை வாய்மூடி இருக்க அந்த இனம் வேரோடு சத்தமில்லாமல் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இன் நிலையில் தான் தங்கள் கடல் எல்லையில் வரும் கப்பல்களை தாக்கத்தொடங்கினர் சோமாலியர்கள் , வழக்கம் போலவே உலகம் அவர்களை கடல் கொள்ளையர் என்கின்ற பட்டத்துடன் அதனை வெறு ஒருதிசையில் அவர்களது பிரச்சனைகளை திசை திருப்பி அவர்களை கொள்ளையாரக்கி , பயங்கரவாதிகள் ஆக்கி அழகு பார்த்தது உலகம்.

போராடித்தான் அனைத்தையும் பெற வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட அம்மக்கள் , நாகரிக உலகத்தின் சுயநலத்திற்க்கு பலியாகிபோன ஒரு மக்கள் கூட்டம்.அந்த மெல்லிய கறுத்த உருவங்கள் தம் மண்ணிலேயே பசியாலும் நோயாலும் இறந்து கொண்டிருக்க உலகம் இவர்கள் மீது அரசில் நடாத்திக்கொண்டு இருப்பது இன்றைய நவ நாகரிக உலகத்தின் வெட்ககேடான ஒரு செய்தியே...