Monday, April 3, 2017

கடவுளின் மரண வாக்குமூலம்......


சபிக்கபட்ட
இனமென்று
தெரிந்திருந்தும்
உன்னை நிமிர்த்திட
துடித்தேன் நான்.....

யாருக்கும் கிடைக்காத
பொக்கிசமாய்
அர்சுனனை மீண்டும்
உன் குடியில்
பிறக்கவைத்தேன்!
ஆயிரம் ஆயிரம்
அபிமன்யூக்களை
 உனக்கென்று
கொடுத்து வைத்தேன்!

சதுரங்க ஆட்டத்தின்
வித்தைகள் தெரிந்தவனை
உன் கூட்டத்தின்
தளபதியாக்கினேன்!

சுதந்திரத்தின் வாசம்
புரியட்டும் உனக்கு என்று
பறவைகளை உன்
வாசலுக்கு அனுப்பி
வைத்தேன்!

நல்ல எண்ணங்கள் -உன்
புத்தியில் வரட்டுமென
வாசனை மலர்களை
உன் வீட்டு வாசலில்
வைத்தேன்!

கிடுகு வேலிக்குள்
சண்டியனாய்
வளர்ந்தாய் - நீ!

வடக்கென்றும்
கிழக்கென்றும்
தீவென்றும்
வன்னியென்றும்
யாழ்ப்பாணம் என்றும்
பிரிவுகள் பல பேசி
கோமணமும் இல்லாது
அம்மணமாய்
நின்றாய் - நீ!

சாதியென்றும்
மதமென்றும்
தற்பெருமைகள் பேசி
உனக்கு நீயே
மகுடங்கள்
சூடிக்கொண்டாய்!

தலையனை சுகமே
பெரிதென
இருந்தாய்!!
கடவாய் வழிய
படுத்திருத்தல்
சொர்க்கமென
 கிடந்தாய் !!.

அர்சுனர்களின்
ஆட்டம்
உனக்கு சினத்தை
தந்தது!

எவன் செத்தால்
எனக்கென்ன
நான் தப்பினால்
போதும் என
ஓடித்தப்பினாய்...


அர்ச்சுனன் வீரம்
கண்டு
உலமே வியந்து
நின்றது.
உனக்கு மட்டும்
முற்றத்து
மல்லிக்கையின்
மகத்துவங்கள்
புரியவேயில்லை!


கர்ப்பூர வாசனை
தெரியா கழுதையாய்
கிடந்தாய்!!

உனக்காக
உன் பிள்ளைக்காக என
கந்தகம் சுமந்து
நீறாகிபோயினர்
அபிமன்யூக்கள்!!


வாழ்வியலின்
அர்த்தம்
புரியட்டும் என்று
கல்வித்தாயை
வரமாய்
கொடுத்தேன் -உனக்கு.

நீ போதை
தலைக்கேறி
மதம் கொண்டு
திரிந்தாய்!
பிரிவுகள் பல
சொன்னாய்
அடிமையாய் கிடப்பதே
சுகமென கிடந்தாய்!

மெத்தப்படித்த
செருக்கு உனக்கு!
கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாதென
யாரோ சொன்னது.
நந்திக்கடல் அலையின்
ஓசையிலும்
எனக்கு
நன்றாய் கேட்டது.

உன்னைக் காப்பாற்ற
முடியா விரக்தியில்
நானும் அர்ச்சுனர்களும்
நந்திக் கடலில்
இறங்கி,
தூர நடந்தோம்...
பெரிய அலையொன்று
எங்களை விழுங்கியது.

அர்ச்சுனர் கூட்டம்
அமிழும் நிலையிலும்
தாகத்திற்க்கு
தமிழீழம்
கேட்டது!
கொடுத்துவிடலாம் என
ஒரு கணம் நினைத்தேன்!

திரும்பிப் பார்த்தேன்..

நந்திக்கடலின்
ஆர்பரிப்பில்,
தப்பிய
தறுதலையொன்று

தலையாட்டியாய்
மாறி நின்றது!

எருமைவழிப்
பிறப்பொன்று
சொந்த சகோதரிகள்
மார்புக்குள்
வெடிகுண்டு தேடியது!


இன்னொன்று
செத்த பிணங்களை
புணர்ந்து கொண்டது!

வெள்ளைவேட்டிக்
கனவில்
நாயாய்
நக்கிநின்றது
இன்னொன்று!


நாசமாய் போகெட்டும்
இந்தக் குடியென
மனமார திட்டிவிட்டு
நந்திக்கடலில்
நானும் இறந்தே
போனேன்!

ஆம்
கடவுள் நான்
இறந்துபோனேன்
மே 18இல்!!

Sunday, January 1, 2017

செல்வரத்தினம் செல்வகுமார் - நினைவுப்பகிர்வுகம்பீரமான நிமிர்ந்த நன் நடை , எவரையும் இலகுவில் வசீகரிக்கும் அழகிய தோற்றம், எப்போதும் கலகலப்பான வெள்ளைச்சிரிப்பு இவை எல்லாவற்றிற்க்கும் சொந்தக்காரன் எங்கள் செல்வா. 1985 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் கொக்குவில் இந்துவின் வாசலை கடக்கும் ஓவ்வோருவரும் எங்கள் செல்வகுமாரையும் கடந்தே சென்றிருப்பீர்கள். 

ஒரு வெள்ளை அழகிய மாணவன் ஒரு புன்சிரிப்போடு உங்களுக்கு வழிகாட்டி இருப்பான் அல்லது கல்லூரி பூந்தோட்டத்தில் ஏதாவது செய்து கொண்டிருப்பான்.

செல்வரத்தினம் விக்னேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாய் 14-02- 1974 ம் ஆண்டு செல்வகுமார் பிறந்தான். தனது ஆரம்ப கல்வியை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையிலும் உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்தான்.

இயல்பாகவே அவனிடத்தில் ஓர் ஆளுமை இருந்தது  எல்லா  மாணவர்களையும் ஆசிரியர்களையும் இலகுவில் வசீகரிப்பவனாக இருந்தான்...  தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடியவனாக சக மாணவர்களுக்கு ஓர் பெரியண்னாக இருந்தான்.  அவன் நடையில் ஓர் மிடுக்கிருக்கும்....    

கொக்குவில் இந்துக் கல்லூரி பெற்ற மிகச்சிறந்த மாணவர்களில் அவனும் ஒருவன் , கல்லூரியில் சேவைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் செயற்பாடுகளில் மிகவும் அர்பணிபுடன் செயற்பட்டான். பிறருக்கு சேவை செய்வதென்பது அவனுக்கு எப்போதும் விருப்பாமான பணி. 

கல்லூரியை தனது சொந்த வீடுபோல் உரிமை கொண்டாடுவான். கல்லூரியை அழகுபடுத்தும் பூஞ்சோலையை உருவாக்க பெரிதும் பாடுபட்டான். இன்றும் கல்லூரி பூஞ்சோலையில் உள்ள மரம் செடிகளில் பூ மலர்வது எங்கள் செல்வகுமாரின் கல்லறைக்கென்பது அவனை நேசித்த அவன் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். 

அவனது சேவைகள் கல்லூரிக்கு வெளியேயும் தொடர்ந்தது. ....

அவனுள் பல துறைசார்ந்த திறமைகள் இருந்தன. கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டுதுறையிலும் அவன் சிறந்து விளங்கினான். சமூக சேவை செய்யும் நற்குனமுள்ள ஓர் மாணவனாய் கல்லூரியில் அவன் இனங்காணப்படிருந்தான்....

எல்லா நண்பர்களுக்கும் விருப்பமான தோழனாக , வயதில் குறைந்த மாணவர்களுக்கு  வழிகாட்டியாக , தாய் தந்தையருக்கு நல்லதொரு மகனாக தான் நேசித்த மக்களுக்காக உயிரையும் கொடுக்க துணிந்த வீரனாக என பல பரிணாமங்களில் எமக்கு அறிமுகமானான் செல்வா.

பின்னாளில் காலப்பணி கருதி கல்லூரியில் இருந்தும் எம்மில் இருந்தும் மிகவும் தூரம் போயிருந்தான். 

அவனது ஆளுமைகள் மேலும் மெருகேறி தமிழருக்கான நிர்வாக அலகுகளில் அவன் பணி நிலைத்திருந்த போதுதான் அந்த துயரமும் நடந்து முடிந்தது. சூரியகதிர் சுட்டெரிக்க அதில் கலந்து எம் நெஞ்சமெல்லாம் நிறைந்து போனான்  எங்கள் செல்வகுமார்.

தனக்கு விருப்பமான பிறருக்கு சேவை செய்யும் பணியினை விருப்போடு ஏற்று அதற்காகவே வாழ்ந்து எங்கள் மனங்களில் நிறைந்துபோனான் எங்கள் வீரவேங்கை செல்வன்....


செல்லமாய் வளர்ந்த பிள்ளை  -எங்கள்
கொக்குவில் இந்துவின் செல்ல(வ)ப் பிள்ளை
தமிழுக்காய் உயிர் தந்த 
விடுதலை புலிப்பிள்ளை!!

நிமிர்ந்து நீ நடந்தால் 
திசை எட்டும் கை கட்டும்.
உந்தன் வெள்ளை சிரிப்பொலியில்
வகுப்பறைகள் களைகட்டும்.

நினைவெல்லாம் நீ நிறைந்தாய்
மனமெல்லாம் நீ மலர்ந்தாய்
உயிரேல்லாம் நீ நிறைந்தாய்
எங்கள் உணர்வோடு நீ கலந்தாய்

நீ இல்லை என்று யார் சொன்னார்?
செல்வரத்தினம் பெற்ற செல்வமே!
யாருக்கும் கிடைக்காத சொந்தமே!
வாராது போல் வந்த  மாமணியே!

மைதான புழுதிகளில் -இன்னும்
உந்தன் வாசம்!
கல்லூரி வாசல் கடக்கையில் - தென்றலாய்
உந்தன் மூச்சுக்காற்று!

தாய்மொழிபோல் நிலைத்து 
நீ நிற்ப்பாய்
எந்தன் வாய்மொழி 
பொய்க்காது!