Wednesday, September 25, 2024

தியாக தீபம் திலீபன்



வெள்ளி மயில் மீது உலவும்
வேலவனின் வீதியிலே
நாவரண்டு  நாவரண்டு
எங்கள் நாதமணி
பேச்சிழந்தது!

ஈழத்து வீதிகளில்

பாடித்திரிந்த குயில் 

பாரதத்து பாவிகளால்

மூச்சிழந்தது!


போர்களத்தில் 

சுழன்றடித்த

சூறாவளிக்காற்று

கண்முன்னே 

உருகி  உருகி

மெழுகுதிரியாய்

கரைந்து போனது!


பார்த்திருக்க கல்லும்

கரையும்!

காந்தி வழிப்பேரன்

கண்மூடிக்கிடந்தான்!

பார்த்தீபன் எங்களுக்கோ

புது வழியை

தந்து சென்றான்!


தமிழினம் போராடும்

ஆயுதம் இல்லாவிட்டாலும்

புல்லையும் எடுத்து அது

சதிராடும்!

அடக்குமுறைக்கு 

அது என்றும் வளையாது!

விடுதலைக்காய்

போராடும்!


ஈழத்தமிழனுக்கு 

பார்த்தீபன் 

சொல்லிச்சென்ற

புதுக்கீதை இது!


திலீபன் வயிற்றில்

பெரும் பசித் தீ இன்னும்

முளாசி எரிகிறது!

காலங்கள் கடந்தாலும்

ஆற்றமுடியா பசி இது!


விடுதலை ஒன்றே

அவன் பசி ஆற்றும்

வானத்தில் இருந்து

பார்த்தபடி  இருக்கின்றான்


நெஞ்சுக்கு நேர்மையாய்

விடுதலைப்பணி செய்

எங்கள் தியகதீபத்தின்

பசித்த வயிறாறும்!





Friday, July 5, 2024

கரும்புலி மாமா மாமி



பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி

சிறகடிக்கும் பட்டாம் பூச்சி 

வண்ண வண்ண பட்டாம் பூச்சி

எங்கள்  ஊரை காத்து நின்ற 

எங்கள் மாமா! எங்கள் மாமி!

கதைகள்  சொல்வேன்

கேளு நீயும்  பட்டாம்பூச்சி!



சின்ன சின்ன பூக்கள் 

நாங்கள்!

ஈழமண்ணின் விதைகள் நாங்கள்!

அடிமை எண்ணம்

எம்மில் இல்லை

மில்லர் மாமா

பெயரைச் சொன்னால்

கனவில் கூட எதிரி

அழுவான்!

ஈழநாடு பெருமை

கொள்ளும்!


எங்கள் பள்ளி

எங்கள் வீடு

எங்கள் கோயில் 

இடித்த அரக்கனை 

ஓட ஓட விரட்டிய

போர்க் எனும்

எங்கள் மாமா

தோளில் இருந்து

கதைகள் கேட்போம்

நீயும் வாயேன்

பட்டாம்பூச்சி!


பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி 

ஒன்றல்ல இரண்டல்ல

ஓராயிரம் கதையிருக்கு!

கவனமாக கேளு நீயும்!


யாருக்கும்  தெரியாமல்

வெற்றிக்கு உரமான

எங்கள் வீரர் கதைகள் 

சொல்வேன்

கேளு நீயும்

 பட்டாம்பூச்சி;


அடிமை வாழ்வு

என்றும் இல்லை 

ஈழத்தமிழன்

வீழ்வதில்லை

என்று சொல்லி

ஆழக்கடலில்

வெடியாய் வெடித்த

அங்கயற்கண்ணி 

எங்கள் வீட்டின்

மூத்த மாமி!


இன்ப துன்பம்

பார்பதில்லை

சொத்து சுகங்கள் 

சேர்பதில்லை

வாழும் போதும்

சாகும் போதும்

எம்மக்காய்

வாழ்ந்த வீரர்களை

உலகில் எங்கும் 

கண்டதுன்டோ

பட்டாம்பூச்சி!!


பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி 

ஒன்றல்ல இரண்டல்ல

ஓராயிரம் கதையிருக்கு!

கவனமாக கேளு நீயும்!


ஈழத்தமிழன் 

பிள்ளை நான்

உலகம் காணா

ஈகங்களை

கண்டுவளர்ந்த

மழழை நான்


எமக்காய் வாழ்ந்த

வீரர்களை நினைவில்

என்றும் வைத்திடுவோம்

கரும்புலிகள்

நினைவுநாளிள்

அவர் ஈகம் 

நினைத்திடுவோம்!












கரும்புலிகள்

 


கரும்புலிகள் 

அவர் பெயர்

உச்சரிக்கும் போதே!

உள்ளம் கால் தொடங்கி

உச்சி வரை விர் என்று

பரவும் உணர்வு பிரவாகம்!


எந்த தூரிகைக்குள்ளும்

அடக்கமுடியா ஓவியங்கள்!

கற்பனை கடந்த 

சோதிகள்!

அடிமுடி தெரியா

அற்புதங்கள்!


பலவீனமான இனமொன்றின் 

பலமாய் இருந்தவர்!

தாவிவந்த பகை 

அழித்து

கந்தக நெடியாய் காற்றில்

கலந்தவர்!


புறந்தமிழ் சொன்ன 

மறத்தமிழ் வீரர்!

புகழதை விஞ்சிய

எங்களின் வீரர்!


இறந்தவர்களுக்காய்

அழுதவர் மத்தியில்

அழுதவர்களுக்காய்

வெடிசுமந்தார்!


இனி இங்கே மலரும்

சின்னப்பூக்கள்

வாடாதென 

சிரித்தபடி கையசைத்து

சென்றார்!


வாழும் போதும்

சாகும் போதும்

மற்றவருக்காய்

வாழ்ந்த தெய்வ பிறவிகள்!


குனிந்த தலைகளை

நிமிர்ந்திட வைத்தவர்!

எல்லைச்சாமியாய்

எங்களை காத்தவர்!

சந்ததி வாழ்ந்திட

தம்மையே தந்தவர்!


காலம்  உள்ளவும்

பெருவெளியில் காற்றாய்

முற்றத்து மல்லிகையாய்

கரை தழுவும் கடலலையாய்,

உதிரத்தோடு கலந்த  உள்ளுணர்வாய்,  

என்றும்

எங்களுடன் வாழ்வீர்!











Monday, December 25, 2023

ஆழிப்பேரலை அவலம்




கடலம்மா! கடலம்மா! 
எங்கள் கடலம்மா! 

அலை வந்து சீராட்ட
ஏலேலொ பாடி 
உன் கரையில் 
தானே வளர்ந்தோம்!

உன்னுள் முத்தெடுத்து
பசிக்கு மீனெடுத்து
உன் கரையில் நிலவு பார்த்து
கை வீசி நடந்ததெல்லாம்
நீ எங்கள் தாய் என்ற
உறவில் தானே கடலம்மா!

தாயாக நாம் நினைக்க
பேயாகி எம்மை ஏன் அழித்தாய்!

எங்கள் வாசல் வந்தேகிய
உப்புக்கற்றில் 
நேற்றுவரை
கறையேதும் 
இருந்ததில்லை.

கால் நனைத்த
நுரைகளில்,
உன் மடி பொறுக்கிய
கிளிஞ்சல்களில்
இரத்தவாடை
முகர்ந்ததில்லை

ஏன் அன்று
பேயாக மாறிப் போனாய்
எங்கள் கடலம்மா?

அன்று நீ
சங்க தமிழ் விழுங்கினாய்!
இன்று நீ
ஈழத்தமிழ் விழுங்கி
பசியாறிக் கொண்டாயோ!

காவல் தாயாய்
தேசத்தின் அரணாய்
நேற்றுவரை இருந்த நீ
இன்று ஏன் 
கொலை வாளை 
கையேந்தினாய்!

பூ என்றும்
பிஞ்சென்றும்
மூப்பென்றும் பாராது
அள்ளித்தின்றுவிட்டு 
இயல்பாய்
இருக்க
எப்படித்தான் 
முடிந்நது உனக்கு!!

காலங்கள் கடந்தாலும்
நினைவில்
நின்று அழியா
பெரும் கவலை!

மீண்டெழுவேம்!

மீண்டெழுதல் எமெக்கென்றும் 
புதிதல்ல
ஒன்றாய் அரும்பி
பலவாய் விரிந்து 
இவ்வுலகம்
எல்லாமுமாய் 
நிற்போம்!

ஈழ தமிழனுக்கு
சாவொன்றும்
புதிதல்ல
இதையும் 
கடந்து போவேம்!!!

அழித்தாலும்
மறைத்த்தாலும்
காலங்கள் கடந்து
எங்கள் 
வரலாற்றின்
சாட்சியாய்
நீயே இருப்பாய்
எங்கள் கடலம்மா!


Tuesday, May 9, 2023

இதுவொன்றும் கனவல்ல!


இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத் தமிழ் இனத்தின்
ஆயிரம் காலத்து வலி!

கள்ளிச் செடியும் 
முளைகொள்ள
மறுக்கும் 
கந்தக பூமியில் 
கொத்து கொத்தாய் 
எம்மை கொன்றழித்தவனை 
எப்படி மறப்போம்! 
 
பாதுகாப்பு வலயம் எனும்
கொலை வளையமிட்டு
கூண்டோடு எமை அழித்த
சமாதனத்திற்க்கான 
யுத்தம் என்ற   உன்
நயவஞ்சக த்தைத் தான் மறப்போமோ!

எங்கள் குருவிக்கூட்டை 
கலைத்து,  
குஞ்சுகளை தீயில் இட்டு 
பொசுக்கிய 
உன் கைகளை 
எப்படித்தான்
பற்றுவோம்!

இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத் தமிழ் இனத்தின்
ஆயிரம் காலத்து வலி!
 
இரத்தமும் சதையுமாய்  
முள்ளிவாய்க்காலில் 
காற்றோடு கரைந்த 
எங்கள் காவல் தெய்வங்களை 
மறந்திடத்தான் இயலுமோ!

பூ என்றும், 
பிஞ்சென்றும் 
மூப்பென்றும் பாராமல் 
எங்கள் இனத்தை 
வேரறுத்த  வஞ்சகரை 
எப்படி நாம் மறப்போம்!

வந்தாரை வாழ வைத்த 
இனமொன்றை 
நந்திக்கடல் வெளியில்  
கஞ்சிக்காய் அலையவிட்ட 
உன் கொடுமையைத்தான்
மறப்போமோ!?

நாயும் தீண்டா பிண்டமென  
வீதியெங்கும்  பிணமாகி  
நம் சொந்தங்கள் 
கிடந்ததைத்தான் 
மறப்போமோ?

இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத் தமிழ் இனத்தின் 
ஆயிரம் காலத்து வலி!  
நரம்பினில் ஏற்றி 
உருக்கொள்வோம்!

வீழ்ந்த எங்கள் 
உறவுகளை  
நினைவில்  கொள்வோம்!    
நீதி ஒருபோதும் 
பொய்த்தில்லை. 
வஞ்சகர் ஒரு நாளும்
வாழ்ந்ததில்லை!

மறுக்கப்பட்ட நீதிக்காய் 
நம்பிக்கையோடு 
போராடுவோம். 
காலங்கள் ஓடும்
காட்சிகள் மாறும்.
எங்கள் வானத்திலும்
வெள்ளிகள் முளைக்கும்!

இயற்கை எனது நண்பன்,  
வரலாறு எனது வழிகாட்டி 
எனச் சொன்ன 
எங்கள் தலைவனின்   
ஓர்மத்தை நெஞ்சினில் தாங்கி  , 
வலிகளை  நரம்பினில் ஏற்றி , 
அறம் வெல்லும் எனும் நம்பிகையை  
நினைவினில் கொண்டு 
விடியல் தெரியும்வரை 
தொடர்வோம் பயணம்!

இதுவொன்றும் 
கனவல்ல 
மறப்பதற்க்கு 
ஈழத்தமிழினத்தின் 
ஆயிரம் காலத்து வலி!