Sunday, December 8, 2019

கொக்குவில் இந்துவின் கிரிக்கெட் கீரோக்கள்...


1985ம் ஆண்டு கொக்குவில் இந்துவிற்க்குள் 6ம் ஆண்டுக்கு தெரிவாகி உள் நுழைகின்றேன்.  ஆரம்ப பாடசாலையில் இருந்து உயர் பாடசாலைக்கு வந்ததில் ஏகப்பட்ட சந்தோசம்...

சந்தோசம் என்பதை விடவும் பிரமிப்பு. வானுயர உயர்ந்து நிற்க்கும் மூன்று மாடிக் கட்டடம்…..

பரந்து விரிந்திருக்கும் மைதானம்......

பெரிய வகுப்பறைகள்... நூலகம்.......

என எல்லாவற்றையும்  ஆச்சரியம் கலந்த விளிகளோடு வென வாயைப் பிளந்தபடிஅன்னாந்து பார்த்தபடி நகர்கின்றோம்...அன்று எங்கள் சின்னக் கண்களுக்கு அவை பெரிதாய் எங்களுக்கு தெரிந்தனவா? அல்லது இப்போதெல்லாம் எங்கள் மனங்கள் போலவே நாங்களும் குறுகிப் போனோமா தெரியாது?

இப்போது அந்த பிரமாண்டங்களை மனம் உணர்வதில்லை.......

இதைவிட….

மூன்றாம் மாடிக் கண்ணாடிகள் சில உடைந்திருந்தன....

உடைந்திருந்த யன்னலைக்காட்டி இந்த கண்ணாடியெல்லாம் சிக்ஸ் அடிச்சு உடைச்சது உமாசங்கர் அண்ணையும்  லோகன் அண்ணையும் என்று யாரோ சொன்னாங்கள்....  

ஆச்சரியத்தோடு இந்தக்கதைகளைக் கேட்டோம்....

மூன்றாம் மாடி யன்னலுக்கால கதிரை வைச்சு ஏறி மைதானத்தை பார்த்தபோது  தலை சுற்றியது!!

உமாசங்கர் அண்ணையை ஏற்கனவே தெரியும் மஞ்சவனப்பதி வீதியில் பொலிபோல் விளையாடேக்க பாத்திருக்கிறன். ஆனால் லோகன் யார் ஆள் என்று தெரியாது....

சந்திரநாதன் ,லாலா ,ரஞ்சித், பாலா ,விஜி  அண்ணன்மாரின் புகழ் பற்றியும் பெடியள் சொல்லுவாங்கள்.... 

இவர்களில் சிலர் கணாவின் அண்ணன்மார் என்பதில் அவனுக்கு பெருமை... கதை கதையா எடுத்து விடுவான்....

யாழ்ப்பாணத்தை கலக்கிய துடுப்பாட்ட வீரர்கள் இவர்கள் என சொன்னாங்கள்..... 

ஆனாலும் இவர்கள் விளையாட்டை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை....

ஆனாலும் மனதுக்குள் இருந்த அந்நாள் கிரிகெட் கீரோ கவாஷ்கருக்கு பக்கத்தில் இவர்களும் கிரிக்கெட் நாயகர்களாக சேர்ந்து கொண்டார். இந்த கீரோக்களைப் பார்க்க அடிக்கடி  புதுகோயில் கடந்து மைதானப்பக்கம்  போய் வருவோம்... 

சின்னப் பெடியளை கண்டாலே இலையான் கலைக்கிற மாதிரி பிறிவெக்ட்(Prefect) பட்ச்சை குத்திக்கொண்டு திரியிறவங்கள் கலைச்சு போடுவாங்கள்....

மகேந்திரம் சேர் கண்டால் இஞ்சால உங்களுக்கு என்ன வேலையென அடியும் விழும்....இவ்வளவு ரிஷ்க் எடுத்து ஒரு நாள் கடைசில லோகன் அண்ணையை குறூப்பா போய் பொம்பிளை பார்க்கிற மாதிரி ஒளிச்சு நின்டு பார்த்ததில ஒரு பரம திருப்தி....

சென்றல் கிறவுண்டில கோகுலன் அண்ணர் அடிச்ச சிக்ஸர் மணிக்கூட்டு கோபுரத்துக்கு மேலால போச்சுதாம்.... கிருபானந்தன் அண்ணையின்ட ஆட்டத்தால எங்கட ரீம் வென்டுதாம் என்டு படக்கதை சொல்லுறமாதிரி கதை கதையா சொல்லுவாங்கள்….

விசோ என்கின்ற விஷ்வநாதன் கொக்குவில் இந்துவுக்கு கிடைத்த மாஸ்டர் கிளாஸ் கிரிக்கெட்டர்... யாழ்ப்பாணத்தை கலக்கியஸ் டைலிஷ் கிரிக்கெட்டரில் ஒருவர்...  

இவரின்ட ஸ்டையில வகுப்பில பற்பன்னி காட்டுவாங்கள் பெடியள்...

ஆறாம் வகுப்பில இருந்த எங்களுக்கு இதுகள் தான் அந்த நாள் ”சுப்பர் மான்” கதைகள்...

கிருபா அண்ணை, மதி அண்ணை, மகேந்தி அண்ணா , சதீஷ் அண்ணா, விமல்ராஜ், பண்டா அண்ணை, டொலி அன்றியிண்ட சுதா, நவீன்,  சிக்கி, பம்ம்பர கண்ணன், கெங்கா, சஞ்ஜீவன், சுபன் என சிலர் மனதில் நிலைத்தாலும் மூன்றாம் மாடி கண்ணாடி உடைக்காததால் அல்லது உடைச்சும் எங்கட காதுக்கு செய்தி வராததால் உமாசங்கர் அண்ணை , லோகன் அண்ணை , கோகுலன் அண்ணை போன்றோரின் பிம்பம் இன்னும்  உடைக்கப்படாமலே இருந்தது......

சத்தியபாலனின் தலைமையில் விளையாடிய சிறந்த அணிக்கு பிறது  பெரிசா நாங்கள் மார்தட்டிக் கொள்ளுற அளவுக்கு கிரிக்கெட் அணி அமையவில்லை...

பண்டா(சுதாகரன்) அண்ணை எப்படியும் மூன்றாம் மாடிக்கண்ணாடியை உடைச்சு பெரிய கிரிக்கெட்டர் என்ட போஷ்ட்டை தூக்குவார் என்டு  இரசிகர் பட்டாளங்கள் நாங்கள் நினைச்சம் ஆனா அதுவும் நடக்கேல்ல....

நாங்கள் செட் பண்ணி வைச்சிருந்த இந்த கொக்குவில் இந்து விண்ட கிரிக்கெட்டர் அளவுகோல் விளையாடின வங்களுக்கே தெரிஞ்சிருக்குமோ  தெரியாது!! 

ஆனா வெறித்தனமான ரசிகர்கள் நாங்கள் உவங்களின்ட திறமையை அளக்க வேற வழி ஒன்டும் இருக்கெல்ல உதயன் பேப்பர் காரணையும் நம்பேல்லாது! 

அவன் எப்பவும் யப்ணா கிண்டுவைத்தான் தூக்கிப்பிடிப்பான். யப்ணா கின்டு தோத்தா "யாழ் இந்து போராடி தோற்றது" என அடுத்த நாள் செய்தி போடுவான் , இதே எங்களுக்கென்டா கொக்குவில் இந்து படுதோல்வி” என கொண்டாடுவான்.

அந் நாட்களில் உதயன் பேப்பர் யாழ்ப்பாணத்தின் சிறந்த வீரர் தெரிவு நடத்திய மாதிரி, நாங்களும் எங்கட பள்ளிக்கூடத்தில சிறந்த வீரரை  தெரிவு செய்து வைச்சிருந்தம்... மூன்றாம் மாடிக் கண்ணாடி உடைச்சவன் என்கின்ற சேர் பட்டத்தை விடவும் சிறந்த பட்டம் அது......

இந்திய இராணுவ பிரச்சனை வந்து ஒரு இரண்டு மூன்று வருடத்தை ஒண்டுமே இல்லாமல் செய்தது.  பள்ளிக்கூடம்  சின்னா பின்னமாக.....   

மைதானத்தின் மூலையில் நின்ற வேப்ப மரத்திற்க்கு கீழே அகதிகளாய் கல்லூரியில் தங்கியிருந்த 58 பேரின் உடலங்களை புதைத்த மண்ணின் மீது மீண்டும் புல் முளைத்து வர காலங்கள் எடுத்தது!! பிள்ளை பிடிகாரர்களால் வீதிகள் நிறைந்திருக்க பலர் தூர தேசங்களுக்கு சென்று தப்பினர்...

நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை மைதானம் தேடிக் கொண்டிருந்தது......

இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் கொக்குவில் இந்துவின் கிரிக்கெட் வரலாற்றை எழுத எங்கட பட்ச்சில இருந்தே சில பேர் முளைப்பாங்கள் என சத்தியமாய் நினைத்திருக்கவில்லை....

நீன்ட அமைதியின் பின்…….  

வரும் போதே புயலாய் வந்தார்கள்...

அமரர் சேவயர் மாஸ்டரின் ஆரம்பம் உமாசங்கர் அண்ணையின் வளர்ப்பு , ரஞ்ஜித்தின் கண்டிப்பு, கோகுலன் அண்ணை , பாலா , பவசிங்கம் , செல்வராசா அண்ணர் போன்றோரின் அரவணைப்பு என பல சிகரங்களின் கையில்  வளர்ந்ததாலோ என்னவோ  எல்லா மட்சில்லையும்  வெற்றி....

அண்டர் 15 இல் தொடங்கி 17 ,19 என ஒரு கலக்கல் ஆட்டம்.

இதில் ஆராவின்(ஆரூரன்) பங்கு மகத்தானது.... 

இவன் தான் எங்கட எம்.எஸ் தோனி(MS Dohni) தொடர்ந்து அணித் தலைவனாய் அணியை வெற்றி நோக்கி நகர்த்திய ஆளுமை மிக்க கப்டன்....

அணியில் விளையாடிய வயதில் குறைந்த வீரர்களான சசி(நம்பர் 1,2,3 - ஒரே பேர் வழியில மூன்று பேர் - இப்ப பெரியாக்களா இருப்பாங்கள் அதனால் அவங்கட சிறப்பு பட்டப் பெயர்களை தவிர்க்கிறன்), கேதீஷ் ,சந்திரகாசன் போன்றவர்களை உற்சாகமூட்டி எதிரணியின் பலம் அறிந்து விளையாட்டின் போக்குக்கு ஏற்ப தீர்மானங்கள் எடுப்பதில் அவனுக்கு நிகர் அவனே!!

எங்கள் அணி பெற்ற வெற்றிகளுக்கு ஆணிவேராய் நின்று வழி நடாத்திய தளபதி அவன்......

அண்டர் 19 இல்……

ஷ்கந்தாவோட 130 , ஸ்ரான்ட்லி  158,  மானிப்பாயோட 204, சென் ஜொன்ஷ் உடன் 267 , சென்றல் ஓட 248  , ஹாட்ட்லியோட 240 ,  வட்டுக்கோட்டையோட 253 …… 

என வெற்றிக்கொடி கட்டிய பயணம்.... 

யாழ் இந்து வோடு விஷ்வரூபம் எடுத்தது...

எல்லாப் பள்ளிக்கூடங்களோடும் வென்றாலும் யாழ் இந்துவோடு வெல்லுறதில தான் எங்களுக்கு பரமதிருப்தி!  உதயன் காரன் ஊட்டி வளர்த்த பகைமையாய் கூட இருக்கலாம்...

அது தான் எங்களுக்கு அந்தக் காலத்தில பிக்மட்ச்!!

மார்ச் மாதம் 5ம் , 6ம் திகதி 1993ம் ஆண்டு

கொக்குவில் இந்துவின் கே.கே. ஸ் றோட் பக்க மதிலுக்கு பக்கதில இருந்த ஐயர் வீட்டு பாத்துறூமுக்கு மேல் பவிலியனில தகரம் தடி பொல்லு என நாங்கள் செட்டாக......

ஞானதேசிகன் குறூப் கிருபா அண்ணை வீட்டு மதில் பக்க பவிலியனில தாரை தப்பட்டைகளோட களமிறங்க.....

தடல் புடலா நடந்த மட்ச் அது....

191 ஓட்டங்களுடன் யாழ் இந்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து தொடங்கிய எங்கள் அணி ஆட்டத்தை ”காணக் கண் ஆயிரம் வேணும்” என்டு வாங்களே அது மாதிரி ஒரு விளையாட்டு!!

இன்றைக்கும் இருபந்தைஞ்சு வருடம் போயும்...

வேல்ட்கப்புகள்  ,IPL , பிக்பாஷ் எது பாத்தாலும் அந்த மட்சிண்ட கிக் எதிலையும் இல்லை...

ஒவ்வொரு போலையும் இரசித்து பார்த்த மட்ச் என்டா இது தான்.. …


ரஜீவனும் ஜனாவும் ஓப்பினரா தொடங்கி வைக்க ஜனா எதிர்பாராதவிதமாய் ஆட்டமிழந்தான்...அவனைத் தொடர்ந்து புதிய ஆட்டக்காரனாய் உள் நுழைந்தான் கிருபா(சுகு)!!


வரும் போதே ஒரு ஷ்டைலாத்தான் வருவான் எங்கட வகுப்புகார கிருபா!!
எங்கட வகுப்புக்காரன் என  சொல்லி உரிமை கொள்வதில் ஒரு சின்னப் பெருமை!!!

அவன் விளையாடி  விளையாடியே வகுப்புகளை கட் பண்ணினான் எண்டா நாங்க இவன் பாவியிண்ட விளையாட்டு பார்க்கப்போய் வகுப்புக்களை கட் பண்ணிய நாட்கள் ஏராளம்!!!

பந்துக்கும் நோகாம (Bat)பட்டுக்கும் நோகாமல் அடிக்கிற வித்தை அவனுக்கு மட்டும் தான் தெரியும்..

அப்பிடியே நின்டபடி முழங்கால் மடியாம பந்துக்கு நோகாம  சின்ன ஒரு கிஸ் ... பையின் லெக்கில நிக்கிறவன் பவுன்றி லையினுக்கு வெளியில ஓடுவான் பந்து பொறுக்க..... 

அதுதான் அவனின்ட சிக்னேசர் சொட்….

ஆட்டம் தொடக்கம் நல்லா இருந்தாலும் பினிசிங் சரியில்லை எண்ட மாதிரி மூன்றாவதாக வந்த கிருபா மட்டும் நிக்க விகெட்டுகள் கட கட வென அடுத்த பக்கத்தில்  விழத்தொடங்கிச்சு..

6 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்கள்....

கிருபானந்தன் அண்ணையிண்ட மதிலில கறுத்த பெயிண்டால செய்த ஸ்கோர் போட் அழுது வடிஞ்சு கொண்டிருந்திது....

தோல்வி பெரும்பாலும் உறுதிசெய்யப்பட்டு விட்டது! இனி ஏதும் அதிசயம் நடந்தால் தான் உண்டு…..

கமலரிண்டை வகுப்பை கட் அடிச்சிட்டு வந்த கண்சிமிட்டி சசிதரன் உவங்கள் தோக்கப் போறாங்கள்... யப்ணா கிண்டு விட்ட நாறப்போறாங்கள் என சொல்லி விட்டு... இடையிலேயே போய் விட்டான்.....

எங்களுக்கு ரென்சன்...  ரென்ஷன் என்பதைவிடவும் ஒருவித அவமானம்...

இப்பதான் கிளை மாக்ஷ் காட்சி தொடங்குது..... (இளையராஜாவின் பேய்ப்பட டியுங் டியுங்...மியூசிக் இந்த இடத்தில....)


ஆறாவது வது பட்ஷ்மன்னா சின்னக்கண்ணன் பாரதியார் சொன்னது போல் "எங்கிருந்தோ வந்தான்என்ட மாதிரி


கிருபாவோட சேர்ந்து விளையாடத்தொடங்க நிலைமை தலை கீழா மாறிச்சு....

கிருபா 75…..

 சின்னக்கண்ணன் 98……

அப்பத்தான் அந்த அதிசயத்தை கிருபா நிகழ்த்தினான்...


மூன்றாம் மாடிக் கண்ணாடி உடைக்கிறதே பெரிய விசயமாய் இருக்க இவன் மிட் ஓப்க்கிலால அடிச்ச சிக்ஸ் பள்ளிக்கூட மூன்றாம் மாடி மூலையில இருக்கிற வேப்பமரம் கடந்து கே.கே. ஸ் றோட் கடந்து மஞ்சவனபதி வாசலில ( இப்ப வளைவு இருக்கிற இடம்) போய் விழுந்திச்சு....


றீ பிளையெல்லாம் பார்க்க முடியாது... பாக்க கிடைச்சவனுக்கு அதிஸ்டம்…. அணில் பாத்தவனுக்கும் , பாதரின்ட பற்றீசில மயங்கி கிடந்தவனுக்கும்  சொறி(sorry) தான்!

எங்கட கொக்குவில் இந்து கிரிக்கெட்டர் அளவுகோலை மாத்தின பெருமை அவனுக்கு தான்....  

அன்று லோகன் அண்ணை உமாசங்கர் அண்ணை போன்றோரின் சாதனையை ஓவர் ரேக் பண்ணினான் எங்கள் கிருபா....

இடையில ஒரு சோடா வாங்க பத்து பேரிட்ட காசு சேர்த்து  கொஞ்சம் குடிச்ச படி வைச்சிருந்தம் 100 அடிச்சா கிறவுண்டுக்குள்ள ஓடிப்போய்க் குடுக்க எண்டு

கடைசி வரை அந்தப் பாக்கியம் கிடைக்கவேயில்லை....

324 அடிச்சு ஒய்ந்தாங்கள் எங்கட பெடியள்.....

இப்ப பளோ ஓன் ... 

10 விக்கெட்டையும் 5:30 மணிக்குள் புடுங்கினா எங்களுக்கு வெற்றி..

9 விக்கெட் இழந்து 111 ஓட்டம் எடுத்து 5:30 ஆகும் வரை ரெஸ்ட் மட்ச் விளையாடிட்டு ஆளைவிட்டா போதும் என போய்ச் சேர்ந்தாங்கள்.....

ஆரா தலைமையில் ரஜீவன், கிருபா, ஜெனா, சிங்கிலி, கண்ணன், சின்னக்கண்ணன் , காண்டி என்டு நம்பிக்கை நட்ச்சத்திரங்கள் அணிவகுத்து யாழ்ப்பாணத்தையே கலக்கி எடுத்தது அது ஒரு பொற்க்காலம்!!இதில கண்ணனிண்ட பந்து வீச்சு வேற லெவல்….

வேகம்….வேகம்....

விக்கெட் பறந்து போய் பவுண்டறி லையினுக்கு கிட்ட விழும்....

அந்தக்காலத்தில பந்து வீச்சு வேகத்தை அளக்க ஏதாவது கருவி இருந்திருந்தா 140 மேல கட்டாயம் இவனின்ட பந்துவீச்சு வேகம் இருந்திருக்கும்...

சுபர்சொனிக் மாதிரி வேகமா போடுவான்.....

எங்கட யாழ்ப்பாணத்து பிறட்லீ(Brett Lee) இவன் தான்!!! எல்லா பற்ஷ்மன்னுக்கும் சிம்ம சொப்பனம்...

தொடர்ச்சியாக வேகமாக (Consistent Pace) பந்துவீசும் திறமையுள்ள வீரன்... சராசரிய 4 தொடக்கம் 5 வரையான விக்கெட்டுகளை பந்து வீசிய எல்லா போட்டிகளிலும் இவன் பெற்றது இவனது சிறப்பு.

சென்றல் கிறவுண்டில கேறீபிள்சீ(KCCC) மச்..... ஸ்கந்தாவோட என நினைக்கிறன்...

எப்படியும் மத்தியானத்துக்கு பிறகு போனா மச் களைகட்டும் கடைசிக்கட்டம் பாக்கலாம் என்டு பின்னேர வகுப்புகளை கட் அடிச்சிட்டு வந்தா மட்ச் முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு போயிட்டாங்கள்...

என்னடா என்டு புதினம் கேட்டா……

அடப்பாவி கண்ணா 5 விக்கெட்டை 6 ரன்னுக்கு புடிங்கி (என்டு நினைக்கிறன்)  கேமையே மத்தியானத்துக்கு முதல் முடிச்சு விட்டான்....

செந்தில்வேல் நாதனுக்கு பிறகு எங்கட பள்ளிக்கூடம் கண்ட மிகச்சிறந்த பந்துவீச்சாளன்…

ரஜுவன் இவனைத் தவிர்த்து எங்கள் அணியின் புகழைச் சொல்ல முடியாது!

பவிலியனில் இருக்கும்போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருக்கும் அமைதியின் உருவம்...

மைதானத்தில் இறங்கினால் வேற லெவல்....

எட்டுப் பக்கமும் பந்து பறக்கும்....

ஒபின் பட்ஷ்மன்….. 

பந்து வீச்சிலும் கலக்குவான்.... 

எங்களுக்கு கிடைச்ச நல்லதொரு ஓல் றவுண்டர்....

இவனை நம்பி அடுத்து பட் பண்ண போற கிருபா பாட் பண்ணாமல் இருக்கலாம்...

அவ்வளவுக்கு நம்பிக்கையா நிண்டு விளையாடுவான்....

இவனும் ஜெனாவும் சேர்ந்து போடுற பிள்ளையார் சுழிதான் பல வெற்றிகளுக்கு காரணம்.....

யோகரன், சசி, யக்குட்டி, கருணா ,சிவசீலன், நந்தீஸ் என பலர் எங்கட பட்சில இருந்து ஆரம்பக்கால ரீமின் வளர்ச்சிக்கு உதவிய வீரர்கள்.

கொக்குவில் இந்துக் கல்லூரி கிரிக்கெட் ரீமை வளர்த்துவிட்டதில பெரும் பங்கு கேறிபிள்சீக்கு இருக்கு....திறமையானவர்களை இனம் கண்டு கிளப் மட்ச் விளையாடவிடுறது...

கல்லூரி விளையாட்டுவீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை உபயோகிக்க கொடுகிறது  , விளையாட்டு வீரர்களை பயிற்சி கொடுக்கிறது என அவர்களின் பங்கு அளப்பரியது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகேந்திரன் மாஸ்டர் தேவராஜா மாஸ்டர் பற்குணம் மாஸ்டர் , கல்லூரிப்பழைய மாணவர்கள் முதலி அண்ணர் , ஜெகன் அண்ணர் போன்றோரின் தன்னலமற்ற சேவையை பாராட்டாமல் இருக்கமுடியாது.

யாழ்ப்பாணத்தின் மனம் கவர் கிரிகெட் வீரர்கள்!

எங்கள் கிரிக்கெட் கீரோக்களின் திறமைகளை வழி மெழியும் வகையில் யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் உதயன் பத்திரிகை இரு தடவை நடாத்திய யாழ்ப்பாணத்தின் மனம் கவர் கிரிகெட் வீரன் எனும் கருத்துக்கணிப்பு  பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்....

1989ம் ஆண்டு பின் 1993ம் ஆண்டு என இரு தடவைகள் நடாத்தப்பட்ட இப்போட்டியில்... 1989ம்  ஆண்டு யாழ் இந்துவின் அபி முதல் இடத்தையும் இரண்டாம் இடத்தை கொக்குவில் இந்துவின்  கிருபானந்தன்  கைப்பற்றியதும் பெருமைக்குரியது...

கடைசி திகதிவரை கிருபானந்தன்  முன்னிலையில் இருந்ததும் இறுதி நாள் போட்டி முடிவு அறிவிப்பின்போது உதயன் பக்கச்சார்ப்பாய் நடந்து கொண்டாதாக பல விமர்சனங்கள் அந்நாளில் உதயன் மீது வைக்கப்பட்டாலும் எங்கள் வீரர்கள் தவிர்க்க முடியாதவர்களாக மக்கள் மனங்களிள் நிறைந்திருந்தார்கள் என்பதையே இப்போட்டி கட்டியம் கூறியது....

இதைத்தொடர்ந்து 1993ம் ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பு போட்டியில் முதல் மூன்று இடங்களையும் கொக்குவில் இந்து வீரர்கள் கிருபா , சின்னக்கண்ணன் (தணிகேஸ்வரன்), ரஜீவன் எடுத்து யாழ்ப்பாணத்தின் மனம் கவர் கிரிகெட் வீரர்கள் எனும் பெருமையை தனதாக்கிக் கொண்டார்கள்.

இவை 90களில் எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் யாழ்ப்பாணத்து கிரிகெட் இரசிகர் மனங்களை கட்டிப்போட்டு இருந்தார்கள் என்பதற்க்கு இவை சான்றுகள் ஆகும்.

இதை விடவும் கொக்குவில் இந்துவை தான்டி சென் ஜோன்ஸ் காண்டீபன் சென்றல் சுரேஷ் யாழ் இந்து சின்ன வரதன் போன்றோரும் 1993களின் கிரிக்கெட் வீரர்களாக மனதில் நின்றார்கள்....

இது ஒரு கிரிக்கெட் இரசிகனாக எனது பார்வையில் பட்டதை நான் இரசித்தவற்றை பதிவுட்டுள்ளேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் பல பார்வைகள் இருக்கலாம் உங்கள் இரசனையும் என்னொடு ஒத்துப்போகலாம்... 

இல்லை மாறுபட்டிருக்கலாம்... 

சில வீரர்களை தவறுதலாக தவற விட்டிருக்கலாம் .... 

ஒருவரை பாரட்டும்போது அவரை விட சிறந்தவரை  அல்லது அதே தகுதிகளை கொண்ட மற்றொருவரை பாராட்டாமால் விடுவது அவரை தூற்றுவதற்க்கு சமனானது எனும் கருத்தை உடையவன் நான். எனவே இயலுமானவரை என் மனதில் நின்ற 90களின் நிகழ்வுகளை நடுநிலமை தவறாது  இங்கே ஆவணப்படுத்தியுள்ளேன்.....

ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். அனேகமாக இது தான் நான் கொக்குவில் இந்து மைதானத்தில் பார்த்த கடைசி மச்... அதன் பின் இடப்பெயர்வு புலப்பெயர்வு என பல பல மாற்றங்கள்......

காலம் விசித்திரமானது இன்று 07/12/2019 சனிக்கிழமை காலை 8:35 மெல்பேர்னின் புற நகர் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் எனது மகன் விளையாட பார்வையாளர் மண்டபத்தில் இருந்தபடி 25 வருடங்களுக்கு முன்னர் நண்பர்களுக்கு பார்வையாளராய் இருந்த அனுபவங்களை கனடாவில் தாங்கள் வெளியிடும் மலருக்காக எழுதிக்கொண்டிருக்கின்றேன்.... 

அன்று நண்பர்கள் விளையாட அவர்களின் விளையாட்டை ரசித்தேன்... இன்று மகனுக்கு நண்பர்களிடம் கற்றவற்றை ஊட்டிவிட்டு அவன் விளையாட ரசிக்கின்றேன்.....  

கொக்குவில் இந்துவின் கிரிக்கெட் பாரம்பரியம் தலைமுறை தான்டியும் தேசங்கள் கடந்தும் தொடர்கின்றது....2 comments:

  1. உங்கள்கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்!

    ReplyDelete
  2. பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள் மனம் 90 களிலே சஞ்சரிக்கிறது
    எத்தனையை இழந்து விட்டோம்

    ReplyDelete