Monday, April 3, 2017

கடவுளின் மரண வாக்குமூலம்......


சபிக்கபட்ட
இனமென்று
தெரிந்திருந்தும்
உன்னை நிமிர்த்திட
துடித்தேன் நான்.....

யாருக்கும் கிடைக்காத
பொக்கிசமாய்
அர்சுனனை மீண்டும்
உன் குடியில்
பிறக்கவைத்தேன்!
ஆயிரம் ஆயிரம்
அபிமன்யூக்களை
 உனக்கென்று
கொடுத்து வைத்தேன்!

சதுரங்க ஆட்டத்தின்
வித்தைகள் தெரிந்தவனை
உன் கூட்டத்தின்
தளபதியாக்கினேன்!

சுதந்திரத்தின் வாசம்
புரியட்டும் உனக்கு என்று
பறவைகளை உன்
வாசலுக்கு அனுப்பி
வைத்தேன்!

நல்ல எண்ணங்கள் -உன்
புத்தியில் வரட்டுமென
வாசனை மலர்களை
உன் வீட்டு வாசலில்
வைத்தேன்!

கிடுகு வேலிக்குள்
சண்டியனாய்
வளர்ந்தாய் - நீ!

வடக்கென்றும்
கிழக்கென்றும்
தீவென்றும்
வன்னியென்றும்
யாழ்ப்பாணம் என்றும்
பிரிவுகள் பல பேசி
கோமணமும் இல்லாது
அம்மணமாய்
நின்றாய் - நீ!

சாதியென்றும்
மதமென்றும்
தற்பெருமைகள் பேசி
உனக்கு நீயே
மகுடங்கள்
சூடிக்கொண்டாய்!

தலையனை சுகமே
பெரிதென
இருந்தாய்!!
கடவாய் வழிய
படுத்திருத்தல்
சொர்க்கமென
 கிடந்தாய் !!.

அர்சுனர்களின்
ஆட்டம்
உனக்கு சினத்தை
தந்தது!

எவன் செத்தால்
எனக்கென்ன
நான் தப்பினால்
போதும் என
ஓடித்தப்பினாய்...


அர்ச்சுனன் வீரம்
கண்டு
உலமே வியந்து
நின்றது.
உனக்கு மட்டும்
முற்றத்து
மல்லிக்கையின்
மகத்துவங்கள்
புரியவேயில்லை!


கர்ப்பூர வாசனை
தெரியா கழுதையாய்
கிடந்தாய்!!

உனக்காக
உன் பிள்ளைக்காக என
கந்தகம் சுமந்து
நீறாகிபோயினர்
அபிமன்யூக்கள்!!


வாழ்வியலின்
அர்த்தம்
புரியட்டும் என்று
கல்வித்தாயை
வரமாய்
கொடுத்தேன் -உனக்கு.

நீ போதை
தலைக்கேறி
மதம் கொண்டு
திரிந்தாய்!
பிரிவுகள் பல
சொன்னாய்
அடிமையாய் கிடப்பதே
சுகமென கிடந்தாய்!

மெத்தப்படித்த
செருக்கு உனக்கு!
கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாதென
யாரோ சொன்னது.
நந்திக்கடல் அலையின்
ஓசையிலும்
எனக்கு
நன்றாய் கேட்டது.

உன்னைக் காப்பாற்ற
முடியா விரக்தியில்
நானும் அர்ச்சுனர்களும்
நந்திக் கடலில்
இறங்கி,
தூர நடந்தோம்...
பெரிய அலையொன்று
எங்களை விழுங்கியது.

அர்ச்சுனர் கூட்டம்
அமிழும் நிலையிலும்
தாகத்திற்க்கு
தமிழீழம்
கேட்டது!
கொடுத்துவிடலாம் என
ஒரு கணம் நினைத்தேன்!

திரும்பிப் பார்த்தேன்..

நந்திக்கடலின்
ஆர்பரிப்பில்,
தப்பிய
தறுதலையொன்று

தலையாட்டியாய்
மாறி நின்றது!

எருமைவழிப்
பிறப்பொன்று
சொந்த சகோதரிகள்
மார்புக்குள்
வெடிகுண்டு தேடியது!


இன்னொன்று
செத்த பிணங்களை
புணர்ந்து கொண்டது!

வெள்ளைவேட்டிக்
கனவில்
நாயாய்
நக்கிநின்றது
இன்னொன்று!


நாசமாய் போகெட்டும்
இந்தக் குடியென
மனமார திட்டிவிட்டு
நந்திக்கடலில்
நானும் இறந்தே
போனேன்!

ஆம்
கடவுள் நான்
இறந்துபோனேன்
மே 18இல்!!

No comments: